கிருஷ்ணகிரியில் பாறை ஓவியம் கண்டெடுப்பு
பதிவு செய்த நாள்
07
ஆக 2025 12:08
சென்னை; கிருஷ்ணகிரி மாவட்டம் கடமக்குட்டை கிராமப் பகுதியில், பாறை ஓவியம், கல்வட்டம் எனும் ஈமக்காட்டை, சென்னை பல்கலை மாணவர் சுதர்சன் கண்டறிந்துள்ளார். கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட எல்லை பகுதியில் உள்ள காப்புக்காட்டு மலையின் உச்சியில் உள்ள, கடமக்குட்டை கிராமப் பகுதியில், சென்னை பல்கலை, பண்டைய இந்திய வரலாறு மற்றும் தொல்லியல் துறை தலைவர் சவுந்தரராஜன் மற்றும் பேராசிரியர் ஜினுகோஷி வழிகாட்டுதலில், மாணவர் சுதர்சன், கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் உள்ள பாறைகளில் ஓவியங்கள் இருப்பதை கண்டறிந்தார். இது குறித்து அவர் கூறியதாவது: கடமக்குட்டை கிராமம் மலை உச்சியில் உள்ளது. இங்கு பழங்குடியினரான இருளர்கள் வசித்த குகைப்பகுதியில் ஆய்வு செய்தபோது, யானை ஓவியங்கள் இருந்ததை அறிந்தேன். மூன்று இடங்களில், இதுபோன்ற பழங்கால ஓவியங்கள் இருந்ததைக் கண்டறிந்தேன். அவற்றில் நான்கு யானைகள் வரையப்பட்டு உள்ளன. மேலும், ஆய்வு செய்ததில், அருகில், இரும்புகால புதைப்பிடமான கல்வட்டங்கள் மூன்று உள்ளதை கண்டறிந்தேன். , கடமக்குட்டை பகுதி, யானை வழித்தடமாக உள்ளதால், விவசாயத்தை யானைகள் சேதப்படுத்தக் கூடாது என்பதற்காக, யானை உருவத்தை தற்போதும் நாமக்கட்டியால் வரைந்து, அறுவடை காலமான சித்திரை மற்றும் தை மாதங்களில் வணங்குவதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். அவற்றின் அருகில், 17 மீட்டர்; 18 மீட்டர்; 8 மீட்டர் விட்ட அளவுள்ள, இரும்பு காலத்தை சேர்ந்த, மூன்று கல் வட்டங்கள் உள்ளன . பாறை ஓவியங்கள் உள்ள பகுதிக்கு, சற்று தொலைவில் உள்ள பாறையில், தமிழ் மொழியில், கிரந்த எழுத்துக்களில் கல்வெட்டு ஒன்று உள்ளது. அதில், 13ம் நுாற்றாண்டில் ஆட்சி செய்த, ஹொய்சாள மன்னர் வீரராமநாதரின் பெயர், பட்டப் பெயர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. அருகில், இரு கொம்புகளுடன் உள்ள ஒரு மனித உருவம், குதிரையின் மீது சவாரி செய்யும் மனிதனும், பாறை செதுக்கல்களாக உள்ளன. பொதுவாக, அக்காலத்தில், கொம்புகளை உடைய மனித உருவம், தெய்வமாக வணங்கப்பட்டுள்ளதை, பல இடங்களில் உள்ள ஓவியங்களின் வாயிலாக, அறிய முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
|