இந்த ஆண்டு வரலட்சுமி விரத பூஜை ஆடி மாதம், நான்காவது வெள்ளிக்கிழமை வந்துள்ளது. அன்று ஆடி வெள்ளி, பவுர்ணமி, வரலட்சுமி விரத பூஜை ஆகிய மூன்று முக்கிய திருநாட்கள் ஒன்றிணைந்ததால், இந்து பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேட்டுப்பாளையம் நகரில் பெரும்பாலான பெண்கள் தங்கள் வீடுகளில் சிறிய அளவில் அம்மன் சுவாமியை செய்து வைத்து, அதற்கு அலங்காரம் செய்து, பூஜை செய்தனர். பூஜையில் ஈடுபட்ட பெண்கள் வரலட்சுமி நோன்பு இருந்து, 16 வகை செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி, விரதம் இருந்தனர். பின்பு பழங்கள், பல்வேறு வகையான உணவுப் பொருட்களை படைத்து பூஜை செய்து வழிபட்டனர். நகரில் பல வீடுகளில், நேற்று பெண்கள் வரலட்சுமி விரதம் இருந்து, அம்மன் சுவாமிக்கு பூஜை செய்து வழிபட்டனர். பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு தாலி சரடு, வளையல், பிரசாதம் ஆகியவை வழங்கி மகிழ்ந்தனர்.