பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள உருமாண்டம்பாளையத்தில் பழமையான பண்ணாரி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி பூஜை, பவுர்ணமி பூஜை, வரலட்சுமி விரத பூஜைகள் நடந்தன. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. 108 பெண் குழந்தைகள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜையில் பங்கேற்றவர்களுக்கு அம்மன் படம், மஞ்சள் கொம்பு, மஞ்சள் சரடு, பச்சரிசி, சீப்பு, கண்ணாடி வளையல், வெற்றிலை பாக்கு, எலுமிச்சம்பழம், வாழைப்பழம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பல்லக்கில் கன்னிப்பெண்கள் அம்மனை சுமந்து வந்து ஊஞ்சலில் அமர்த்தினர். பவுர்ணமி பூஜையையொட்டி மாப்பிள்ளை விநாயகர், தலவிருச்சமான வில்வமரம் மற்றும் பண்ணாரி அம்மன், மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் நிலவு பூஜை நடந்தது. அனைத்து பக்தர்களுக்கு அம்மன் படத்துடன் மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. அன்னதானம் நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகள், கோவில் மூலஸ்தன குழு மற்றும் பவுர்ணமி குழு தலைவர் தேவேந்திரன் தலைமையில் செய்யப்பட்டிருந்தது.