ரங்கம் அல்லது அரங்கம் என்றால் சபை. சிதம்பரத்தில் நடராஜா இருக்கிற சந்நிதியை சபை என்றுதான் சொல்கிறோம். சபையில் நர்த்தனம் செய்வது தான் பொருத்தம். ஆனால், இந்த இரண்டு சபைகளில் ஒருத்தர் தான் நர்த்தனம் செய்கிறார். சாந்த நிலையில் பிரம்மமாக இருக்கப்பட்டவர் என்று சொல்கிற சிவன் தான் நடராஜாவாக ஆனந்தக் கூத்தாடுகிறார். ஜகத் பரிபாலகரான விஷ்ணுவோ, திருவரங்கத்தில் ரங்கராஜாவாக உறங்குகிறார். சிவபெருமானுக்கும், திருமாலுக்கும் நாம் பங்கீடு செய்கிற தொழில்களின்படி பார்த்தால் இது தலைகீழாக அல்லவா இருக்க வேண்டும்? இதிலிருந்து என்ன தெரிகிறது? முத்தொழில், ஐந்தொழில் என்றெல்லாம் பிரித்து, நாம் ஒவ்வொன்றுக்கும் ஒரு மூர்த்தியைச் சொன்னாலும் கூட, இதுவும் நம் சிற்றறிவுக்கு எட்டுவதற்காக, பராசக்தி எடுத்துக் கொண்ட பல தோற்றங்கள் தான் இவை. அந்த மூர்த்திகள் அடியோடு பிரிந்து இருப்பதாக நினைக்கக் கூடாது. இதைத் தான் இரண்டு ராஜாக்களும் உணர்த்துகிறார்கள். இவருடைய காரியத்தை அவரும், அவருடைய காரியத்தை இவரும் செய்கிற மாதிரி இருவரும் நடிக்கிறார்கள். எல்லாவற்றையும் ஒடுக்கிக் கொள்பவர் ஆட்டமாக ஆடுகிறார். ஆட்டி வைத்து பரிபாலிப்பவரோ தூங்குகிறார்.