மதுராந்தகம்:மதுராந்தகத்தில், ஏரி காத்த ராமர் என அழைக்கப்படும் கோதண்டராமர் திருக்கோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா, இன்று விமரிசையாக நடைபெற்றது.
மதுராந்தகத்தில், ஏரி காத்த ராமர் எனும், கோதண்டராமர் திருக்கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், வேறெங்கும் காண முடியாதபடி, மூலவர் சன்னிதியில் ராமர், சீதையை கைப்பற்றியவாறு திருமணக் கோலத்தில் அமைந்திருப்பது சிறப்பு. இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்காக, கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் பாலாலயம் செய்யப்பட்டு, கண்ணாடி அறைக்குள் சுவாமி சிலை வைக்கப்பட்டு உள்ளது. தற்போது, உபயதாரர்கள் நிதியின் மூலமாக திருக்கோவிலில் சன்னிதிகள், விமானங்கள், ராஜகோபுரம் உள்ளிட்டவை புனரமைக்கப்பட்டு ஜீர்ணோத்தாரண மஹா கும்பாபிஷேக விழா, இன்று காலை 8:00 மணிக்கு மேல் 9:30 மணிக்குள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று மாலை 6:00 மணிக்கு, பெரிய பெருமாள் திருவீதி புறப்பாடு நடக்கிறது.