வடமதுரை; வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலய ஆண்டு திருவிழாவிற்காக திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வடமதுரை வழியே பாதயாத்திரையாக சென்ற வண்ணம் உள்ளனர்.
இத்திருவிழா வரும் ஆக.29ல் கொடியேற்றத்துடன் துவங்கி செப்.8 வரை திருவிழா நடக்க உள்ளது. இதற்காக திண்டுக்கல், தேனி மாவட்ட பக்தர்கள் சிறு, சிறு குழுக்களாக வேளாங்கண்ணி நோக்கி வடமதுரை வழியே நான்கு வழிச்சாலையில் செல்கின்றனர். இவர்களுள் பலர் கொடி, சிலுவையை ஏந்தியும், சப்பரம், தேர், சைக்கிள் ரிக் ஷா போன்றவற்றில் மாதா சிலையுடன் பக்தி பாடல்களை ஒலிபரப்பியவாறு செல்கின்றனர். சாணார்பட்டி மங்கமனுாத்து பக்தர்கள் ஓய்வு பெற்ற பள்ளி தலைமையாசிரியர் சந்தியாகு தலைமையில் ஒரு குழுவாக நேற்று இருந்து பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு சென்றனர். இக்குழுவினர் கூறுகையில், ‘மணப்பாறை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் வழியே ஆக.29 வேளாங்கண்ணி சென்றடையும் வகையில் திட்டமிட்டு புறப்பட்டுள்ளோம். அன்று (ஆக.29) நடக்கும் திருவிழா கொடியேற்றத்தில் பங்கேற்று வழிபட்டு ஊர் திரும்புவோம்’ என்றனர்.