நவகிரக கோட்டை சிவன் கோவிலில் இந்தோனேசியா பக்தர்கள் சுவாமி தரிசனம்
பதிவு செய்த நாள்
22
ஆக 2025 03:08
பல்லடம்; இந்தோனேஷிய நாட்டைச் சேர்ந்த குழுவினர், பல்லடம் அருகே, சித்தம்பலம் சிவன் கோவிலில் இன்று தரிசனம் செய்தனர். திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த, சித்தம்பலத்தில், பிரசித்தி பெற்ற நவகிரக கோட்டை சிவன் கோவில் உள்ளது. கோவை காமாட்சிபுரி ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு, இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்த, 16 பேர் கொண்ட குழுவினர் இன்று வந்திருந்தனர். அமாவாசை தினமான இன்று சிறப்பு வழிபாடுகள், ஹோமங்கள் நடைபெற்று வந்த நிலையில், அனைவரும் அதில் பங்கேற்று வழிபாடு செய்தனர். காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர், அனைவரையும் வரவேற்று உபசரித்தார். தொடர்ந்து, நவகிரகங்கள் மற்றும் சிவபெருமானை வழிபட்டு, ஆதீனத்துடன் இணைந்து முழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதனையடுத்து, கோவிலின் வரலாறு, சிறப்புகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தனர். பஞ்சலிங்கேஸ்வரர் கூறுகையில், ஆன்மிக காரியங்களுக்காக, நான், அடிக்கடி வெளிநாடுகள் செல்வது வழக்கம். அவ்வாறு, இந்தோனேஷியா நாட்டுக்கு சென்றபோது, அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் உற்சாகத்துடன் வரவேற்பு அளித்ததுடன், பாரம்பரியம் குறித்து தெரிந்து கொள்ள, தமிழகத்துக்கு சுற்றுப்பயணம் வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தனர். அதன்படி, தற்போது, இந்தோனேஷியாவில் இருந்து பல்லடம் வந்த, 16 பேர் கொண்ட குழுவினர், கடந்த இரண்டு நாட்களாக பல்லடத்தில் தங்கியுள்ளனர். இன்று நவகிரக கோட்டை சிவன் கோவிலில் தரிசனம் செய்ய வருகை தந்தனர். மேலும், சில நாட்கள் தமிழகத்தில் தங்கி, பிரசித்தி பெற்ற பல கோவில்களுக்கு சுற்றுப்பயணம் செல்லவும் திட்டமிட்டுள்ளனர் என்றார்.
|