Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » குமரகுருபரர்
குமரகுருபரர்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 பிப்
2011
05:02

திருச்செந்தூர் அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டத்தில் சண்முக சிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி என்ற தம்பதியர் வாழ்ந்து வந்தனர். நீண்ட நாட்களாக குழந்தையில்லாத இத்தம்பதியர் கந்தசஷ்டி விரதமிருந்து ஒரு ஆண்குழந்தையைப் பெற்றனர். குழந்தைக்கு குமரகுருபரன் என்று வைத்தனர். பிறந்ததில் இருந்து குழந்தைக்கு பேச்சு வரவில்லை. பெற்றோர் கவலையடைந்தனர். கவிராயர் ஒரு முடிவுக்கு வந்தவராய், சிவகாமி நமது பிள்ளை குருபரன், முருகன் கொடுத்த வரம். அவனால் தான் குழந்தைக்கு பேசும் ஆற்றலை தர முடியும். நாம் திருச்செந்தூர் சென்று அவனிடம் முறையிட்டு விரதம் இருப்போம். அவன் பார்த்து எது செய்தாலும் சரி என்றார். அதன்படி அவர்கள் குழந்தையுடன் திருச்செந்தூர் சென்றனர். கடலலைகள் கோயில் மதிற்சுவரில் அடித்து விளையாடியதை குருபரன் பார்த்து கொண்டிருந்தான். கடலுக்குள் இறங்கி அலைகளுடன் விளையாடினான். அந்த அலைகள் கரைகளில் மோதிய சப்தத்தில் ஓம், ஓம் என்ற மந்திர ஒலி கேட்டது. கவிராயரும், அவரது மனைவியும் அங்கேயே தங்கி விரதம் மேற்கொண்டனர். காலையில் கடலில் குளித்து, நாழிக்கிணற்றில் நீராடி முருகனை வழிபட்டு, ஒருவேளை உப்பில்லாத உணவு சாப்பிட்டு 40 நாள் விரதமிருந்தனர். ஆனால், குருபரனிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வேதனை மிகுந்த பெற்றோர், குழந்தை பேசும் வரை கோயிலை விட்டு செல்லமாட்டோம் என பிடிவாதமாக முருகனிடம் சொல்லி விட்டனர்.

45வது நாள் மாலையில், கவிராயர் தன் மனைவி குழந்தையுடன் கோயிலுக்குள் நுழைந்தார். குழந்தை ஏக்கத்துடன் பெற்றோரை பார்த்தது. இதைக்கண்ட தகப்பனின் கண்களில் இருந்து அருவியாக கண்ணீர் கொட்ட, முருகா! என் தெய்வமே! இன்னும் எத்தனை நாள் தான் எங்களை சோதிப்பாய். நீ கருணைக்கடல் ஆயிற்றே! இந்த குழந்தைக்கு மட்டும் கருணை காட்டாதது ஏன்? என மனமுறுகி பிரார்த்தித்தார். அவரது மனைவியும், சண்முகா! குழந்தை இல்லாமல் இருப்பது கொடுமைதான். அதைவிட கொடுமையானது ஊமைக்குழந்தையை வைத்திருப்பது இல்லையா? நாங்கள் தவறு செய்திருந்தால் எங்களுக்கு தண்டனை கொடு. இந்தக்குழந்தை என்ன தவறு செய்தது? அதை ஏன் தண்டிக்கிறாய்? எங்கள் குழந்தையை காப்பாற்று, என கதறினாள். இந்த நிலையில் குருபரன் வாய்திறந்து ஏதோ பேச முற்பட்டான். பெற்றோர்கள் கூர்ந்து கேட்க, தெளிவில்லாமல் ஏதோ சில சொற்களை சொன்னான். அடுத்த சில நொடிகளில் அந்த பாலகன், கார்மேகம் கடும் மழை பொழிவது போல கவி மழை பொழியலானான். முருகனைப்பற்றிய பாடல்கள் அவன் வாயிலிருந்து காட்டாற்று வெள்ளம் போல கரைபுரண்டு ஒலித்தது. குழந்தை பேசமாட்டானா என ஏங்கியிருந்த பெற்றோர் வாயடைத்து நிற்க, கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களும் இந்த அதிசயம் கண்டு திகைத்து நின்றனர். தேனினும் இனிய குரலில் அவன் பாடிய பாடல் தொகுப்பே கந்தர் கலிவெண்பா ஆகும். இதுவே குமரகுருபரரின் முதல் நூல் ஆகும். சரவணபவ என்ற மந்திரத்தின் மகிமையை வெண்பாக்களாக விட்டார் குருபரர்.

குமரா! முருகா! உனது கருணையால் ஊமையும் பேசுவது மட்டுமில்லாமல், பெரும் கவிஞனும் ஆவான் என்பதை நிரூபித்துவிட்டாய். உனது கருணையே கருணை என உள்ளம் நெகிழ்ந்தனர் பெற்றோர். பெரும்கவியாக திகழ்ந்த குருபரர் பெற்றோருடன் அதிக நாட்கள் தங்கவில்லை. அவர்களது ஆசியுடன் தல யாத்திரை புறப்பட்டார். மக்கள் அவரை குமரகுருபர சுவாமிகள் என அழைத்தனர். ஒருமுறை குமரகுருபரர் மதுரை மீனாட்சி கோயிலுக்கு வந்தார். மீனாட்சி சன்னதியின் முன் நின்றிருந்த போது, மடை திறந்த வெள்ளம் போல், மீனாட்சி பிள்ளைத்தமிழ் பாடலை பாடினார். அன்னையை சிறு குழந்தையாக பாவித்து, அவளது அழகு, அருள், ஆற்றல், திருவிளையாடல்கள் அனைத்தையும் பாடி நூலாக வடித்தார். அந்நாளில் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் கனவில் மீனாட்சி தோன்றி, மன்னா! என் செல்லக் குழந்தை குமரகுருபரன் மதுரை வந்துள்ளான். அவன் என்மீது பாடிய நூலை யாம் கேட்டு ஆனந்தமடைய ஏற்பாடு செய்க என்று பணித்தாள். உடனே மன்னர் குமரகுருபரர் தங்கியிருந்த இடத்திற்கு சென்று அவர் பாதம் பணிந்து அம்மனின் விருப்பத்தை கூறினார். கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நூல் அரங்கேற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

புலவர்கள் எல்லாம் கூடியிருக்க, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் அரங்கேறி கொண்டிருந்தது. அப்போது கோயில் தலைமை அர்ச்சகரின் மகள் அங்கு வந்து மன்னரின் மடியில் உரிமையுடன் அமர்ந்து குருபரர் பாடுவதைக் கேட்டு மகிழ்ந்தாள். அரங்கேற்றம் முடிந்ததும் சிறுமி உரிமையுடன் மன்னரின் கழுத்திலிருந்த மணிமாலையை கழற்றி குருபரரின் கழுத்தில் அணிவித்தாள். பின் மூலஸ்தானத்தை நோக்கி நடந்து மறைந்தாள். அதன் பின்தான் வந்தது மீனாட்சி என அனைவருக்கும் தெரிந்தது. பின்னர் குமரகுருபரர் காசி சென்று விஸ்வநாதரை புகழ்ந்து பாடினார். ஒரே நாளில் இந்துஸ்தானி கற்று அங்கியிருந்த சுல்தானிடம் பேசி, அனுமதி பெற்று கேதார் ஆலயத்தின் அருகே குமாரசுவாமி மடம் என்ற சைவ மடத்தை நிறுவினார்.  இப்போதும் காசியில் இந்த மடம் சமயப்பணி செய்து வருகிறது.

குமரகுருபரர் கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ், மீனாட்சியம்மை குறம், மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, மதுரைக் கலம்பகம், சிதம்பரச் செய்யுட் கோவை, பண்டார மும்மணிக்கோவை, காசிக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை என இன்னும் பற்பல நூல்களால் தமிழன்னையை அலங்கரித்த பெருமகன் அவர். முருக பக்தராகவும், மீனாட்சிபக்தராகவும், சரஸ்வதி பக்தராகவும் திகழ்ந்தவர்.  காசியில் ஒளரங்கசீப்பின் மூத்த சகோதரரான தாரா ஷுகோ என்ற மன்னர்முன் சிங்கத்தின் மேல் ஏறிச் சென்று அந்த சுல்தானை வியக்க வைத்து, தாம் காசியில் நிறுவிய இந்து மடத்திற்கு நிலத்தை தானமாகப் பெற்றவர். இவர் காசியில் இந்துஸ்தானி மொழியில் நிகழ்த்திய கம்பராமாயணச் சொற்பொழிவைக் கேட்டுக் கவரப்பட்டுத்தான் துளசிதாசர் இந்தியில் ராமாயணம் எழுதும் உத்வேகம் பெற்றார். முருகப் பெருமானையே சிந்தனை செய்து வாழலானார் குமரகுருபரர் சில ஆண்டுகள் கடந்தன. ஒருநாள் அவர் தன் பெற்றோரை அழைத்தார்.

இந்த உலகிற்கு நான் வரக் காரணமானவர்கள் நீங்கள். இப்பிறவியில் நீங்களே என் தாய், தந்தை ஆனால் எல்லா ஆன்மாக்களுக்கும் என்றென்றும் தாயாகவும் தந்தையாகவும் பரம்பொருளை நாடுகிறது என் உள்ளம். நான் துறவுநெறியில் ஈடுபட்டுத் தமிழையே துணையாய்க் கொண்டு வாழ விரும்புகிறேன். உங்களை நான் பிரிந்து செல்வதாக எண்ணலாகாது. உங்களுக்கும் சொந்தமான முருகன் அருள் உங்களை எப்போதும் காத்து நிற்கும்! கடவுள் துணை உங்களுக்கும் இருக்கும்போது நான் என்கிற இந்த மனிதத் துணை தேவையில்லை. ஒரே ஊரில் நான் வாழ்வதை விரும்பவில்லை. பல ஊர்களுக்குச் சென்று பல்வேறு ஆலயங்களை தரிசித்து அங்குள்ள தெய்வங்கள் பற்றியெல்லாம் பாடல் புனைய விழைகிறேன்! தன் அருமைப் புதல்வன் பேசிய பேச்சைக் கேட்டுக் கவிராயரின் கண்கள் கசிந்தன. பிள்ளைக்கு மணமுடித்துப் பேரன் பேத்தியைப் பார்க்க எண்ணியிருந்த சிவகாச சுந்தரி செய்வதறியாது திகைத்தாள். அப்போது முருகன் அவள் ஏற்கெனவே தன் சன்னதியில் சொன்ன வாசகத்தை அவள் ஆழ்மனத்தில் நினைவுபடுத்தினான். முருகன் அருளால் பிறந்த குழந்தை முருகனிடமே இவனை ஒப்படைப்போம் என்றல்லவா அன்று சொன்னாள்? முருகன் திருவருளால் இத்தனை ஆண்டு காலம் குமரகுருபரனோடு வாழும் பேறு கிடைத்தது. மற்றபடி முருகன் சன்னதியில்தானே இவன் கவிமழை பொழியத் தொடங்கினான்? அன்றே முருகன் இவனை ஆட்கொண்டு விட்டான்.  தன் பிள்ளையாகத் தமிழன்னைக்குத் தத்துக் கொடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டதை அவள் புரிந்துகொண்டாள். கண்ணீர் வழிய வழிய அவனை நிரந்தரமாக வழியனுப்பி வைத்தாள். விம்மிய உதடுகளைத் துண்டால் மறைத்துக் கொண்டு கவிராயரும் அவனுக்கு விடைகொடுத்தார். பெற்ற பிள்ளை எப்போதும் பெற்றோருடன் இருந்தால்தான் ஆயிற்றா? அவன் எங்கிருந்தாலும் அவன் புகழைக் கேட்கும்போதெல்லாம் தாங்கள் பெற்ற பிள்ளை என்ற ஆனந்தம் அவனால் கிடைக்கத்தானே போகிறது? அந்த ஆனந்தத்திற்கு விலையேது? குமரகுருபரன் தங்களின் தற்காலிகக் குழந்தைதான். அந்த உறவு நிலையல்ல, செந்தூர்க்குமரனே தங்களின் நிரந்தரக் குழந்தை, கடவுளே நிலையான உறவு என்பதை அவர்கள் மனம் புரிந்துகொண்டு ஆறுதல் அடையத் தொடங்கியது. எஞ்சிய வாழ்வைச் செந்தூர் முருகன்மேல் பக்தி செலுத்தி அவர்கள் வாழலானார்கள். வாய்பேசாத குழந்தைக்குக் கடவுள் அருளால் வாய்ப்பேச்சு வந்ததும், பெற்றவர்கள் சில ஆண்டுகள் அவனை வளர்த்துக் கடவுள் பணிக்கே அவனைத் தந்ததும், உறவுகளைத் துறந்து அவன் துறவியாக வாழ்ந்ததும் குமரகுருபரன் கதை. காசியில் தங்கி இறைவனுக்குச் சேவை செய்து வந்தவர், வைகாசி தேய்பிறை திரிதியைத் திதியில் விளம்பி வருடம் வைகாசி 18 ஆம் நாள் (1.6.18) இறைவனடி சேர்ந்தார்.! இந்த நாளில்தான் அவருக்குக் குருபூஜையும் நடைபெறுகிறது.!

எழுதிய நூல்கள்

கந்தர் கலிவெண்பா
மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
மதுரைக் கலம்பகம்
நீதிநெறி விளக்கம்
திருவாரூர் நான்மணிமாலை
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
சிதம்பர மும்மணிக்கோவை
சிதம்பரச் செய்யுட்கோவை
பண்டார மும்மணிக் கோவை
காசிக் கலம்பகம்
சகலகலாவல்லி மாலை
மதுரை மீனாட்சியம்மை குறம்நமதுரை மீனாட்சி அம்மை குறம்
மதுரை மீனாட்சி அம்மை இரட்டை மணிமாலை
தில்லைச் சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை
கயிலைக் கலம்பகம்
காசித் துண்டி விநாயகர் பதிகம்.

தமிழ் மொழியிலே பக்தி மணங்கமழும் பனுவல்களைப் பாடிய புலவர்களுள் குமரகுருபரருக்கு ஒரு சிறப்பான இடமுண்டு. குமரகுருபரர் பாடிய கந்தர் கலிவெண்பா என்ற பாடல் மிகவும் சக்தி வாய்ந்த முருகன் தோத்திரப் பாடலாகும். உத்தியோக உயர்வு, வழக்குகளில் வெற்றி, அளவற்ற செல்வம், உடல் ஆரோக்கியம் அனைத்தையும் இந்நூலைப் பாராயணம் செய்பவர் அடைவர். குமரகுருபரர் சரசுவதியைத் துதித்துப் பாடிய சகலகலாவல்லி மாலை பாடல் பிறந்த கதை அதிசயமானது. பத்துப் பாடல்கள் கொண்ட இந்நூல் நித்தியபாராயண நூலாக இன்றும் விளங்குகிறது. ஏராளமான துதிகள் இருப்பினும், சகலகலாவல்லி மாலை உடனடிப்பலனைத் தரவல்ல அற்புதப்பாடலாகும். அதிவிரைவில் பலனளிக்கவல்ல இத்துதி, முகலாய அரசன் ஒருவனிடமிருந்து சிவன்கோயிலிற்கு நிதி பெற எண்ணிய குமரகுருபரர்க்கு சரஸ்வதிதேவி அருள்புரிந்த அற்புத சம்பவத்தை ஒட்டி அவரால் இயற்றப்பட்டது.

ஒருமுறை குமரகுருபரர், காசியாத்திரை சென்றார். அங்கே டில்லியை ஆண்ட முகலாய மன்னனான பாதுஷாவிடம் காசி மாநகரில் இடம் வேண்டிப் பெற்று, பரமசிவனுக்கு ஒரு கோயில் கட்ட நினைத்தார். ஆனால் இந்துஸ்தானி மொழி தெரியாததால் பாதுஷாவிடம் தனது கோரிக்கையை எடுத்துக் கூற முடியாமல் தவித்தார். அம்மொழி தெரிந்த சிலர் இவருக்கு உதவுவதாகக் கூறி சாக்குப் போக்குகள் சொல்லி, பாதுஷாவை சந்திக்க விடாமல் தடுத்து வந்தனர். அதனால் வருந்தி குமரகுருபரர், எல்லாம் வல்ல சரசுவதி தேவியை துதித்து சகல கலாவல்லி மாலையென்னும் பிரபந்தத்தைப் பாடினார். உடனே வாணியின் அருளினால் அவருக்கு இந்துஸ்தானி மொழியில் சரளமாகப் பேசும் ஆற்றல் கிட்டிற்று. பாதுஷாவிடம் எப்படிச் செல்வது என குமரகுருபரர் யோசித்துக்கொண்டிருந்தபோது வாணியின் அருளால் சிங்கம் ஒன்று அவர் முன் வந்து நின்றது. குமரகுருபரர் அச்சிங்கத்தின் மீதமர்ந்து நேரே பாதுஷாவின் சபைக்குச் சென்றார். திடீரென்று சபைக்கு வந்த சிங்கத்தையும் அதன்மீது கம்பீரமாக அமர்ந்து வந்த குமரகுருபரரையும் கண்ட சபையோர் அச்சமும் ஆச்சரியமும் அடைந்தனர்.

பாதுஷாவோ குமரகுருபரரை வணங்கி வரவேற்றான். பல்வேறு சமயங்களைச் சார்ந்தவர்கள் கூடியிருந்த சபை அது. அதில் குமரகுருபரரை உரை நிகழ்த்த வேண்டினான் பாதுஷா. குமரகுருபரரும் கலைமகளின் அருளால் இந்துஸ்தானி மொழியில் சைவ சித்தாந்தத் தத்துவத்தை மடை திறந்த வெள்ளம் போல் எடுத்துரைத்தார். அதனைக் கேட்ட பிற சமயகுருமார்கள் இந்து மதத்திலும் சைவ சமயத்திலும் ஆர்வங் கொண்டனர். பாதுஷாவும் குமரகுருபரரின் சைவ சித்தாந்த உரையைக் கேட்டு அக மகிழ்ந்தான். அவருக்கு யாது செய்ய வேண்டும் எனக் கேட்டான். உடனே குமரகுருபரர் காசியிலேயே தான் இருப்பதற்கு ஒரு மடம் அமைப்பதற்கு கேதார கட்டத்தில் இடம் வேண்டினார். அப்படியே பாதுஷா அவருக்கு கேதார கட்டத்தில் இடம் தந்து உதவினார். பின்பு குமரகுருபரர் அங்கே மறைக்கப்பட்டுக் கிடந்த விசுவலிங்கப்பெருமானை வெளிப்படுத்தி சிறு கோயில் கட்டி நித்திய பூஜைகள் நியமப்படி நடைபெற எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். கேதார கட்டத்தில் உள்ள கேதாரலிங்த்தை வெளிப்படுத்தி கோயில் கட்டுவித்தவர், குமரகுருபர ஸ்வாமிகள்தான். சகலகலாவல்லி மாலை 10 எளிய தமிழ்ப்பாடல்கள் கொண்டது. இதன் முதற்பாடல்

வெண்டாமரைக்கன்றி நின்பதம்.
தாங்க என் வெள்ளை உள்ளத்
தண்டாமரைக்குத் தகாது கொலோ!
சகம் ஏழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்
தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவை கொள் கரும்பே
சகல கலா வல்லியே!

ஏழு உலகங்களையும் உண்டு பாதுகாத்தவனான திருமால் உறங்கவும், அவ்வுலகங்களை அழிக்கின்ற தொழிலையுடைய சிவபெருமான் பித்தனாகி அலையவும் செய்தவனான நான்முகன் இனியதென எண்ணிச்சுவைக்கும் கரும்பைப் போன்றவளே! வெள்ளைத்தாமரையே அன்றி உனது திருவடிகளை எனது தூய்மையான வெள்ளை உள்ளம் தாங்கத்தகுதியற்றதோ? என்பதாகும். இதில் பிரும்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முப்பெருந் தொழில்கள் குறிக்கப்படுகின்றன. பிரும்மாவே சரஸ்வதி கடாட்சம் வேண்டித்துதித்தபாடல் இது என்பதால் மற்ற கலைமகள் தோத்திரங்களுக்கு இல்லாத மகிமை இப்பாடலுக்கு உண்டு.

மாணவர்கள் அனுதினமும் பாராயணம் செய்ய வேண்டிய துதி இது. தேர்வெழுதப் போகும் முன் மாணவர்கள் இப்பாடலைச் சொல்லி விட்டுச் சென்றால் ஞாபக சக்தியும் தெளிவுடன் விடைகளைக் குறிப்பிட்டு எழுதும் ஆற்றலும் அவர்கட்கு சரஸ்வதியின் திருவருளால் சித்திக்கும். மேலும் நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் மாணவர்கள் அவசியம் சொல்ல வேண்டிய பாடல் இது. இப்பாடல் மாணவர்களுக்கு நம்பிக்கையையும், மனத்தெளிவையும், மேலும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தித் தேர்வை எதிர்கொள்ளவும் உதவும். ஓம் மனோன் மணியை வாகீஸ்வர்யை மஹாமாயை நமோ நம: என்ற வாகீஸ்வரி மந்திரத்தையும் தினந்தோறும் சொல்லிவர, மதிப்பும் மதிப்பெண்ணும் அதிகரிக்கும் என்பது நிச்சயம்!

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar