உப்பூரில் விநாயகர் கோயில் மூலவர் மீது பகல் முழுவதும் சூரிய ஒளி படும் வகையில் கருவறை அமையப்பட்டுள்ளதால், வெயிலுகந்த விநாயகர் என அழைக்கப்படுகிறார். மேலும் சீதையை மீட்பதற்கு ராமபிரான் இலங்கைக்கு செல்வதற்கு முன்பாக, இந்த விநாயகரை பிரதீஸ்டை செய்து வழிபட்ட சிறப்பு மிக்க கோயிலாகும். இக் கோயிலில், 10 நாள் சதுர்த்தி விழா ஆக.18 இல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் மாலையில், வெள்ளி மூஷிகம், கேடகம், சிம்மம், மயில், யானை, ரிஷபம், காமதேனு உள்ளிட்ட வாகனங்களில், விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. விழாவின் இன்று மாலை 4:30 மணிக்கு சித்தி, புத்தி ஆகிய தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. வடமாநிலங்களில் மட்டுமே விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெறும் நிலையில், தமிழகத்தில் இரு தேவியருடன் இந்த விநாயகருக்கு மட்டுமே திருக்கல்யாணம் நடைபெறுவதால், பக்தர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. திருக்கல்யாணத்தை தொடர்ந்து, இரவு குதிரை வாகனத்தில் இரு தேவியருடன் விநாயகர் வீதியுலா நடக்கிறது.