நாகப்பட்டினம்; இளைஞர்களிடம் ஆன்மிக பற்றை உருவாக்க வேண்டும் என, பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார்.
நாகையில், ‘சின்மயா மிஷன்’ சார்பில், 50 கோவில்களின் திருப்பணி நிறைவு, பகவத் கீதை பாராயண விழா நடந்தது. ராமகிருஷ்ண ஆனந்தா ஆச்சார்யா தலைமையில் நடந்த இந்த விழாவில் பங்கேற்ற, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: நம் முன்னோர், அறுவடை செய்யும் விளை பொருட்களை ஆறு வகையாக பிரித்து வைத்து, கிராம கோவிலுக்கு; கோவிலை பராமரிப்போர்; விவசாய தொழிலாளர்; சேமிப்பு; இல்லாதோர் என பகிர்ந்து கொடுத்தனர். அப்போது ஜாதிகள் கிடையாது. ஆங்கிலேயர் வந்த பின், இந்த நடைமுறை உடைக்கப்பட்டது. வரி வசூலித்தனர். அதன் பிறகு ஜாதி உருவானது. எல்லா மதமும் சம்மதம் என்பது ஹிந்து மதம். அது வாழ்வியல் முறை. எல்லா மதத்திற்கும் தாய் மதம் ஹிந்து மதம். பிரதமர் மோடி, கங்கைகொண்டசோழபுரம் வந்தபோது, ‘சின்மயா மிஷன்’ சார்பில், தமிழில் மொழி பெயர்த்த கீதையை வெளியிட்டார். தாய் மொழியில் கீதையை படிக்கும்போது தனி சக்தி கிடைக்கிறது கடந்த 200 ஆண்டுகளில் ஹிந்து தர்மத்திற்கு எண்ணற்ற சோதனைகள் வந்துள்ளது. தற்போது, ஹிந்து மத குருக்கள் மக்களிடம் பேச வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. அப்போதுதான் கிராம மக்களிடம் ஹிந்து மதம் பற்றிய புரிதல் கிடைக்கும். ஆன்மிக பற்றை இளைஞர்களிடம் உருவாக்க வேண்டும். எதையும் எதிர்பார்க்காமல், நம் வேலையின் மீது மட்டுமே பற்று இருக்க வேண்டும். இதுதான் கர்மா. சில இடங்களில் நாம் கீழேயும், வேறு சில இடங்களில் மேலேயும் உட்காரும் நிலை வரும். கீழே உட்கார்ந்திருப்பவர் நாளை மேலே வரலாம். மேலே இருப்பவர், நாளை கடைசியில் அமரும் நிலை ஏற்படலாம். அமரும் இடம் முக்கியமில்லை; வேலையை சரியாக செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.