சீர்காழி மகா திரிசூல வராகி, ராஜ குபேர சாய் பாபா கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஆக 2025 12:08
மயிலாடுதுறை; சீர்காழி அருகே நடந்த மகா திரிசூல வராகி, ராஜ குபேர சாய் பாபா கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு கிராமத்தில் மகா திரிசூல வராகி அம்மன், ராஜ குபேர சாய் பாபா கோவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. 18 அடி உயர பீடத்தின் மீது 16 அடி கருங்கல் திருமேனி அமைக்கப்பட்டு 51 அடி உயர விமானத்துடன் இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. பரிவாரங்களாக விநாயகர், லட்சுமி, கிருஷ்ணர் பளிங்கு திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 26 ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் இசைக்க கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. ஆச்சாள்புரம் சம்பந்தம் சிவாச்சாரியார் தலைமையிலானோர் வேத மந்திரங்கள் ஓத பஞ்சமி திதி, சுவாதி நட்சத்திரம், அமிர்த யோகம் கூடிய 10 மணிக்கு துலா லக்னத்தில் புனித நீரை கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதனை அடுத்து மூலவர்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.