கொக்கூர் கைலாசநாதர் கோயிலில் 200 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஆக 2025 12:08
மயிலாடுதுறை, கொக்கூர் கைலாசநாதர் கோயிலில் 200 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கொக்கூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி சமேத கைலாசநாதர் சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயில் 200 வருடங்களாக பராமரிப்பின்றி சிதிலமடைந்து கிடந்தது. இதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கிராம மக்களின் பங்களிப்புடன் சிதிலமடைந்த கோயில் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு திருப்பணி நடைபெற்றது. திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் கும்பாபிஷேக விழா கடந்த 24-ஆம் தேதி அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி நான்கு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. கும்பாபிஷேக தினமான இன்று நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவில், பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் இசைக்க கோயிலை சுற்றி வந்து விமானத்தை அடைந்தது. அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி, விமான கலசங்களில் புனித நீரூற்ற மகா கும்பாபிஷேகம் 200 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமரிசையாக நடைபெற்றது. பின்னர் மூலவர் மற்றும் பரிவாரா மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.