பதிவு செய்த நாள்
29
ஆக
2025
03:08
சென்னை: திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூரில் பக்தவத்சல பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோவில், 1,150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
மூலவர் பக்தவத்சல பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் அருள்பாலிக்கிறார். திருமங்கையாழ்வாரால் இத்தலம் பாடல் பெற்றது.
இக்கோவில், திருப்பதி திருமலை பெரிய ஜீயர் சுவாமிகள் பரம்பரை அறங்காவலராலும், அறநிலையத்துறை செயல் அலுவலராலும் நிர்வகிக்கப்படுகிறது. கடந்த 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
கடந்த ஜன., மாதம் பாலாலயம் செய்யப்பட்டு, ஒரு கோடி ரூபாயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருப்பணிகள் முடிந்த நிலையில், நேற்று காலை 8:50 மணிக்கு, கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
இதை தொடர்ந்து, பெரிய ஜீயர் சடகோபராமானுஜ ஜீயர் சுவாமிகளின் மரியாதை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று இரவு தங்க கருட சேவை புறப்பாடு நடந்தது.