கோயில் குளத்தை பராமரிக்க முன்வராத ஊராட்சி ஒன்றியங்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஆக 2025 12:08
சோழவந்தான்: சோழவந்தான் அருகே வட காடுபட்டி விக்கிரமங்கலம் இடையே அமைந்திருக்கும் குளத்தை சீரமைக்க வேண்டும்’ என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர். அப்பகுதியின் கோபிநாத் கூறியதாவது: வடகாடுபட்டி – விக்கிரமங்கலம் இடையே மாரியம்மன் கோயில் குளம் அமைந்துள்ளது. இதன் ஒரு பகுதி செல்லம்பட்டி ஒன்றியத்திற்கும், மற்றொரு பகுதி வாடிப்பட்டி ஒன்றியத்திற்கும் உட்பட்டது. மாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவின் முளைப்பாரி, கரகம் உள்ளிட்ட புனித நிகழ்வுகள் இங்கு நடைபெறும்.
இப்பகுதி நிலத்தடி நீர்மட்ட உயர்வுக்கு ஆதாரமாக உள்ளது. வைகையில் தண்ணீர் வரும்போது இக்குளம் நிரம்பும்.மறுகால் பாய வழி இல்லாததால் குளத்தை குத்தகைக்கு எடுக்க ஆளில்லை. குளத்தை துார்வாராததால் ஆகாயத்தாமரை, குப்பைக் கழிவுகளால் நிறைந்துள்ளது. தேங்கிய கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரப்புகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் குளத்தைச் சுற்றிலும் நடைபாதை அமைக்க முயற்சி எடுத்து கைவிடப்பட்டது. இரண்டு ஒன்றியத்திற்கும் பாத்தியப்பட்டதால் யார் பராமரிப்பது என்று கண்டுகொள்ளாமல் கை விட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.