இரு நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, இன்று ஸ்ரீரங்கம் கோவிலில், சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். இதனால் இன்று மதியம், 1:00 மணிக்கு பின், ஜனாதிபதி வந்து செல்லும் வரை பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக, கலெக்டர் அறிவித்துள்ளார். மேலும், கோவிலில் தங்கியிருந்த முதியவர்கள், யாசகர்கள் மற்றும் ஆதரவற்றுவர்களை பாதுகாப்பாக காப்பகங்களுக்கு அழைத்து சென்று தங்க வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார். கோவில் முழுவதையும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதால், நேற்று அங்கிருந்த முதியவர்கள், யாசகர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். ஸ்ரீரங்கம் போலீசார், அவர்களை வெளியேற்றிய போது, கோவில் வளாகத்தில் உள்ள ரெங்கவிலாஸ் மண்டபத்தில் படுத்திருந்த முதியவர் ஒருவரை, போலீசார் காலால் உதைத்தும், அடித்தும் இழுத்துச் சென்றனர். அந்த வீடியோ ஊடகங்களில் வெளியானதால், சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், திருச்சி மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்த முதியவர்கள், யாசகர்கள், ஆதரவற்றவர்களை காப்பகத்துக்கு அனுப்பும்பணியில், இரண்டு போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது முதியவர் ஒருவர், போலீசாருக்கு போதிய ஒத்துழைப்பு வழங்காமல், ஆபாசமாக திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ‘அதனால், போலீசார் அவரை தாக்கி, வலுக்கட்டாயமாக வெளியேற்றி, வாகனத்தில் ஏற்றி காப்பகத்துக்கு அனுப்பியதாக தெரிகிறது. முதியவரை தாக்கிய ஸ்ரீரங்கம் போலீசார் இரண்டு பேர் மீதும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.