ஆதி சங்கராச்சாரியார் தியானம் செய்த கொடசாத்ரி மலை
பதிவு செய்த நாள்
04
செப் 2025 11:09
ஷிவமொக்கா மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதி தான் கொடசாத்ரி மலை. சமஸ்கிருதத்தில், ‘குடாஜா’ என்பது மல்லிகை மலை என்று அர்த்தம். புகழ்பெற்ற கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு பின்புறத்தில், மூகாம்பிகை வனவிலங்கு சரணாலயம் பகுதியில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து, 1,343 மீட்டர் உயரம் கொண்ட இம்மலையின் உச்சியை அடைய, ஐந்து மணி நேரமாகும். இம்மலைக்கு நண்பர்களுடன் அல்லது தனியாக மலையேற்றம் செய்வது, சாகசம் நிறைந்ததாகவும், ஆன்மிக அனுபவத்தையும் அளிக்கும். மலையின் மேற்கு திசை பகுதி, உடுப்பி மாவட்டத்தின் வனப்பகுதியை இணைக்கிறது. மலையில் 4 கி.மீ., அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்ல வேண்டும். செல்லும் வழியில், விநாயகர் குகை, மலையின் உச்சியில் ஆதி சங்கராச்சாரியார் தியானம் செய்த இடத்தை பார்க்கலாம். மலையேற்றம் செய்வோர், விநாயகர் குகைக்குள் பழமையான விநாயகர் சிலை இருப்பதை தரிசிக்கலாம். அதுபோன்று குறிப்பிட்ட இடம் வரை அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்களால் ஜீப்களும் இயக்கப்படுகின்றன. சுற்றுலா பயணியர் காரை இங்கு ஓட்டிச் செல்ல அனுமதி இல்லை. ஒரு ஜீப்பில் எட்டு பேர் வரை பயணம் செய்யலாம். இங்குள்ள சாலை தாரால் போடப்பட்டது அல்ல. மண் சாலை தான். அதுவும் மேடு, பள்ளங்களாக காணப்படும். ஜீப் நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து சிறிது துாரத்தில் கொடசாத்ரி மூல மூகாம்பிகை கோவில் அமைந்துள்ளது. இங்கு வழிபட்ட பின் மலையேற்றத்தை தொடர்கின்றனர். மேலே செல்ல செல்ல ஒத்தையடி பாதையாக இருக்கும். ஜாக்கிரதையாக நடந்து செல்ல வேண்டும். இம்மலைக்கு கரகட்டே வழியாகவும் அல்லது மரகுட்டக்கா வழியாக மலையேறலாம். நீங்கள் செல்லும் வழியில், கொடசாத்ரி மலையில் இருந்து ஐந்து கி.மீ., தொலைவில் உள்ள ஹிடலுமனே நீர்வீழ்ச்சியை காணலாம். இங்கு அக்டோபரில் இருந்து மே இடையே மலையேற்றம் செய்வது சிறந்தது. எப்படி செல்வது?; பெங்களூரில் இருந்து ரயிலில் செல்வோர், பைந்துார் மூகாம்பிகை சாலை ரயில் நிலையத்தில் இறங்கவும். இங்கிருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ள கொடசாத்ரி மலைக்கு, ஜீப்கள் இயக்கப்படுகின்றன. பஸ்சில் செல்வோர் பைந்துார் பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ள கொடசாத்ரி மலைக்கு செல்லலாம். அருகில் உள்ள மற்ற இடங்கள்: நாகரா கோட்டை – 30 கி.மீ., கொல்லுார் மூகாம்பிகை கோவில் – 37 கி.மீ., சிக்கந்துார் கோவில் – 51 கி.மீ., ஜோக் நீர்வீழ்ச்சி – 100 கி.மீ., – நமது நிருபர் –
|