16 ஆண்டுகளுக்கு பின் திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04செப் 2025 12:09
தஞ்சாவூர்; திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு இன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், சுவாமிமலை, சுவாமிநாதசுவாமி திருக்கோவிலின் இணைக்கோயிலான திருவலஞ்சுழி, பிரஹன்நாயகி உடனுறை அருள்மிகு கபர்தீஸ்வரசுவாமி திருக்கோவில் பூலோகத்தின் புண்ணிய பூமியாக கருதப்படும் பாரத தேசத்தில் விநாயகரின் ஸ்தலங்களாக புராணங்களின் வாயிலாக கூறப்படுவது பத்து ஸ்தலங்களில் ஒன்றாகும்.
மந்திர மலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பை கயிராகவும் கொண்டு தேவர்களும், அசுரர்களும் இணைந்து திருப்பாற்கடலில் அமுதம் கடையும்பொழுது மந்திர மலையின் பாரம் தாங்காது வாசுகி தனது கொடிய விஷத்தை பார்க்கடலில் கக்கியது. அவ்விஷம் கொடிய வெப்பமாகமாறி உலகெங்கும் உள்ள ஜீவராசிகளை துன்புறுத்தியது. மேற்படி துன்பம் தாளாது தேவர்கள், அசுரர்கள் மற்ற ஜீவராசிகள் அனைவரும் ஒன்றுகூடி கயிலைமலையை அடைந்து ஈசனிடம் முறையிட்டு வேண்டினர். பிறகு, சிவனின் அறிவுரையை ஏற்று, கடைந்து நஞ்சு கலந்த அமுதத்திலிருந்து ஆலகால விஷத்தை பிரித்து ஈசனால் உண்ணப்பட்டு எஞ்சியிருந்த சுத்த அமுதமயமான நுரைகளை ஒன்று திரட்டி, சகல நிஷ்கல சச்சிதானந்த பரம்பொருளான ஸ்ரீ சுவேத விநாயகப் பெருமான் உருவை வழிபட்ட போது சுத்தமான அமுதம் கிடைத்தது. இத்திருக்கோவிலிலேயே விநாயகப் பெருமானுக்கு முதன் முதலாக திருமணம் செய்துவிக்கப்பட்டது. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவில் விநாயகருக்கு திருக்கல்யாண உற்சவம் இத்திருக்கோவிலில் நடைபெறும். இத்திருக்கோவிலில், திருப்பணி ரூ.4கோடியே 50இலட்சத்தில் அரசு நிதி மூலம் நடைபெற்ற வந்த நிலையில், இன்று 4ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக நேற்று யாகசாலை முதல் காலம் தொடங்கியது. தொடர்ந்து ஆறு காலங்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இன்று காலை கடம் புறப்பாடு நடைபெற்று வேத மந்திரம் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இக்கோவிலில் கடந்த 2008 ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தற்போது 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் டி.ஆர். வாமிநாதன், துணை ஆணையர் தா.உமாதேவி, திருக்கோவில் கண்காணிப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.