மத நல்லிணக்கம்; முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் முஸ்லிம் ஜமாத்தினர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05செப் 2025 10:09
சாலைக்கிராமம்; சாலைக்கிராமத்தில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக செல்வவிநாயகர்,முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு ஏராளமான முஸ்லிம் ஜமாத்தினர் மற்றும் நிர்வாகிகள் வருகை தந்தனர்.
சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர் மற்றும் முத்துமாரியம்மன் கோயில் திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது.இதனை தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, சப்த கன்னிகா பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்ற பின்னர் நேற்று காலை 10:20 மணிக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை ஊர்வலமாக கொண்டு சென்று கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். முன்னதாக சாலைக்கிராமத்தில் உள்ள மஸ்ஜிதே இலாகி பள்ளிவாசலை சேர்ந்தவர்களும், ஜமாத் நிர்வாகிகளும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில் கோயிலுக்கு வருகை தந்து கும்பாபிஷேகத்திற்கு தேவையான பழங்கள் மற்றும் பொருட்களை கோயில் நிர்வாகிகளிடம் வழங்கிய போது அவர்களுக்கு சந்தனம்,குங்குமம் கொடுத்து வரவேற்றனர். கோயில் முன்பாக அன்னதானமும், இரவு பட்டிமன்றமும் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் சாலைக்கிராமம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.