திண்டிவனம்; திண் டிவனம் முருகன் கோவிலில், பஞ்சலோக வேல் உட்பட, பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், செந்தமிழ் நகரில் ஞானவேல் முருகன் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு தரிசனத்திற்கு பின், முன்பக்க இரும்பு கேட் பூட்டப்பட்டது. நேற்று காலையில் கோவிலுக்கு வந்த நிர்வாகி ஆத்மராமன், கோவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். கோவில் உள்ளே சென்று பார்த்த போது, மூலஸ்தானத்தின் இரும்பு வாசல் கதவு உடைக்கப்பட்டு, முருகனின் பஞ்சலோக வேல், வெள்ளி பட்டம், பூஜை பாத்திரங்கள், செம்பு உண்டியல், கோவில் வளாக கிணற்றின் நீர் மோட்டார் ஆகியவை திருடு போனது தெரிந்தது. ஆத்மராமன் புகாரில், கோட்டைமேடு போலீசார், வழக்குப்பதிந்து, கோவிலில் திருடியவர்களை தேடி வருகின்றனர்.