சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே உள்ள சிலுவத்துாரை அடுத்த களத்துப்பட்டியில் மஞ்சக்கம்மாள், சலகெருது தாத்தன் மாலை கும்பிடு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதற்கான விழா தெய்வசத்தம் பிடித்தல்,சுவாமி சாட்டுதலுடன் தொடங்கியதை தொடர்ந்து கோயில் வீட்டுக்கு பழக்கூடை, கொழுக்கட்டை கொண்டு வருதல், கோயிலில் அபிஷேகம், தீபாராதனைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று மாலை எருது ஓட்டம் நடைபெற்றது. திண்டுக்கல், தேனி, கரூர் சுற்றுப்பகுதிகளிலிருந்து அழைத்துவரப்பட்ட நுாற்றுக்கணக்கான மாடுகள் ஒரு குறிப்பிட்ட எல்லையில் இருந்து கோயிலை நோக்கி ஓட விடப் பட்டன. இளைஞர்கள் கையில் தலைப்பாகையுடன் கையில் குச்சியுடன் துரத்திக் கொண்டு ஓடி வந்தனர். அவர்களை தேவராட்டம், உருமிமேளம் முழங்கவும், மஞ்சள் பொடியை துாவியும் பொதுமக்கள் வரவேற்று உற்சாகப்படுத்தினர். இறுதியாக எல்லைக்கோட்டை தாண்டிய மாடுகளுக்கு பூமாலைகள் அணிவித்து தீபாராதனை வழிபாடுடன் மரியாதை செலுத்தப்பட்டது. மடூர், களத்துப்பட்டி, சிலுவத்துார், கோட்டைப்பட்டி, மருநுாத்து உட்பட பல்வேறு கிராம மக்கள் பங்கேற்றனர்.