ரஜதகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சீர் வரிசை எடுத்து வந்த முஸ்லிம்கள்
பதிவு செய்த நாள்
11
செப் 2025 11:09
வேளாங்கண்ணி; வேளாங்கண்ணியில், மத நல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக, ஹிந்து கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக, சீர்வரிசை எடுத்து வந்த முஸ்லிம்கள் யாகசால பூஜைக்கு, பட்டுபுடவை தேங்காய், பூ,பழம் என 16, வகையான மங்கள பொருட்கள் வழங்கினர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ரஜதகிரீஸ்வரர் கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா இன்று காலை விமர்சையாக நடைபெற்றது. 20, ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் இந்த கும்பாபிஷேக விழாவை சிறப்பிக்கும் விதமாகவும், ஹிந்து, முஸ்லிம்கள் மத நல்லிணக்க ஒற்றுமையை வலுப்படுத்தும் விதமாக ரஜதகிரீஸ்வரர் கோவிலுக்கு வேளாங்கண்ணி முகமதியர் தெருவை சேர்ந்த இஸ்லாமியர்கள் இன்று மேளதாளம் முழங்க சீர்வரிசை கொண்டு வந்தனர். இதையொட்டி மஞ்சள், குங்குமம், தேங்காய், வாழைப்பழம், பட்டுப்புடவை உள்ளிட்ட பல்வேறு வகையான மங்கள பொருட்களை முகமதியர் தெரு ஜமாத்தை சேர்ந்த முஸ்லிம்கள் பள்ளிவாசலில் இருந்து வேளாங்கண்ணி ரஜதகிரீஸ்வரர் கோவிலுக்கு ஊர்வலமாக சீர்வரிசை எடுத்து வந்தனர். அப்போது இஸ்லாமியர்களை இன்முகத்துடன் கோவிலுக்குள் வரவேற்ற ரஜதகிரீஸ்வரர் கோவில் நிர்வாகிகள், அவர்களுக்கு மாலை மற்றும் சால்வைகளை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் யாகசாலை பூஜைக்கு சீர்வரிசையாக கொண்டு வரப்பட்ட நவதானியம் உள்ளிட்ட 16, வகையான, ஹோமத்திற்கு தேவையான மங்கள பொருட்களை கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினர். மத நல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக முஸ்லிம்கள் சீர் எடுத்து வந்து வழங்கிய சம்பவம் வேளாங்கண்ணி பொது மக்கள் மற்றும் பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
|