விழுப்புரம்: ஆதிவாலீஸ்வரர் கோவில் உண்டியல் உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றனர். விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே மிகவும் பழமை வாய்ந்த ஆதிவாலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் காலையில் வழிபாடுகளை முடித்து கொண்டு, மதியம் 12:00 மணிக்கு பூட்டி கொண்டு அர்ச்சகர் பரசுராமன் வீட்டிற்கு சென்றார்.
பின் மீண்டும் மாலை, 4:00 மணிக்கு கோவிலை திறந்த போது, உள்ளே உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பக்தர்களின் காணிக்கை பணம் திருடு போனது தெரியவந்தது. இந்த கோவிலில் கடந்த சில மாதங்களில், நான்கு முறை உண்டியல் உடைத்து பணம் திருடு போனது குறிப்பிடத்தக்கது. இது குறித்து விழுப்புரம் மேற்கு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.