பதிவு செய்த நாள்
14
செப்
2025
10:09
அன்பு, சேவை, தியாகம், மனிதநேயம்... இந்தச் சொற்கள் அனைத்தும் ஒன்றாகக் கலந்த உருவமே பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா. இவர் 1926 நவம்பர் 23ம் தேதி, ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள புட்டபர்த்தியில் அவதரித்தார்.
புட்டபர்த்தி, பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் பிறப்பிடமாக உலகம் முழுவதும் அறியப்படும் புனித தலம். இங்கு அமைந்துள்ள பிரசாந்தி நிலையம், அமைதியின் உயர்ந்த கோவில் என கருதப்படுகிறது.
புட்டபர்த்தியின் பழைய பெயர் கொள்ளப்பள்ளி. சித்ராவதி நதிக்கரையில் 60 வீடுகளே கொண்ட சின்னஞ்சிறிய கிராமமான இந்த பகுதி, எறும்பு மற்றும் பாம்பு புற்றுகளால் நிரம்பி இருந்ததால், காலப்போக்கில் புட்டப்பள்ளி என்றும், பின்னர் அதுவே மருவி புட்டபர்த்தி என்றும் அழைக்கப்பட்டது.
புட்டபர்த்தியானது ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தின் தலைநகராக இருந்தது. இப்போது, அனந்தபூர் மாவட்டம் 2022 பிப்ரவரி 1ல் வெளியிடப்பட்ட, அரசிதழ் அறிவிப்பின்படி, புட்டபர்த்தியை தலைமையிடமாகக் கொண்ட ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் என அழைக்கப்படுகிறது.
ஒரு காலத்தில் குடிநீர் உட்பட எவ்வித அடிப்படை வசதியுமின்றி சின்னஞ்சிறிய கிராமமாக இருந்த புட்டபர்த்தி, இன்று விமான நிலையம், ரயில் நிலையம், பல்கலைக்கழகம், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உட்பட அனைத்து வளங்களும் கொண்ட பன்முக மக்கள் வாழும் சர்வதேச நகரமாக வளர்ந்துள்ளது.
இவை அத்தனைக்கும் பிரதான காரணமானவரும், தற்போது மகா சமாதியாகி ஆசி வழங்கி வருபவருமான பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு கொண்டாட்டம், அவரது பக்தர்களால் பல்வேறு விதங்களில் இப்போது முதலே கொண்டாடப்பட்டு வருகிறது.
அவரது போதனைகளை சொல்லும் பிரேமா ப்ரவாஹினி ரத யாத்திரை இந்தியா முழுதும் வலம் வருகிறது.
மஹோத்ஸவம் மூலம் இலவச மருத்துவ முகாம்கள், கல்வி உதவிகள், ரத்த தானம் ஆகியவை நடந்து வருகின்றன. இளைஞர்களுக்கான ஒற்றுமையை வலியுறுத்தும் ஓட்டம் நடக்கிறது. சாய் குறும்பட விழா மற்றும் சாய் கிரிக்கெட் லீக் மூலம் புதிய தலைமுறையினரிடம் ஆன்மிகம் மற்றும் மனித நேயம் ஊட்டப்படுகிறது.
மூன்று லட்சம் சதுர அடியில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான இதில், நோய் தீர்க்க தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன.
இங்கே இல்லாதது, தேடினாலும் கிடைக்காத ஒன்று உண்டு என்றால், கேஷ் கவுன்டர் என்று சொல்லக் கூடிய நோயாளிகளிடம் பணம் பெறக்கூடிய இடம் தான்.
உலகின் எந்த மூலையில் இருந்து வந்தாலும், எந்த வகை தீவிரத்தன்மை வாய்ந்த நோயுடன் இருந்தாலும் ஒரு பைசா செலவு இல்லாமல் உள்ளே வந்து நோய் நீங்கி செல்லலாம். ஆம் முழுக்க முழுக்க மருத்துவமும், மருந்துகளும் இங்கே இலவசம்.
மனித குலத்திற்காக வறுமை, துன்பம், நோய் ஆகியவற்றை நீக்கி, அன்பே மருந்து என்ற தத்துவத்தை நடைமுறையில் கொண்டு வந்தவர் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா. அவரது கருணையால், 1991ம் ஆண்டு ஸ்ரீ சத்ய சாய் உயர் மருத்துவ அறிவியல் கழகம் உருவாகியது.
இன்று வரை, 45 லட்சத்திற்கும் அதிகமான ஆலோசனைகள், 3.4 லட்சம் அறுவை சிகிச்சைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. உலகத் தரத்திலான சிகிச்சை, ஒருவரிடமிருந்தும் ஒரு காசும் வாங்காமல் என்பது இங்கு தினசரி நடைமுறைப் படுத்தப்படுகிறது.
பல துறைகளின் ஒருங்கிணைவு இந்த மருத்துவமனையின் சிறப்பம்சம், ஒரே இடத்தில் பல்வேறு துறைகள் இணைந்து பணிபுரிவது தான்.
இதய நோயியல், இதய அறுவை சிகிச்சை, கண் மருத்துவம், சிறுநீரக நோயியல், எலும்பியல், குடல் நோயியல், பிளாஸ்டிக் சர்ஜரி, கதிரியக்கவியல், மயக்கவியல், செவிலியர் சேவைகள், ஆய்வக சேவைகள், ரத்த வங்கி, உணவு கலந்தாய்வு ஆகியவை ஒரே இடத்தில் கிடைக்கின்றன.
இங்குள்ள நவீன எக்கோ இயந்திரங்கள் உணவு குழாய் மற்றும் மார்பு வழியாக, 4டி சோதனைகள் செய்யும் திறன் கொண்டவை. நோயாளிகளின் இதய நிலையை, மருத்துவர் துல்லியமாக மதிப்பிட முடிகிறது.
புதிய டேட்டா சென்டர், அனைத்து சத்ய சாய் மருத்துவமனைகளின் நோயாளி தரவுகளை ஒருங்கிணைத்து, பாதுகாப்பாக பராமரிக்கிறது.சிகிச்சை மட்டுமின்றி, இந்த மருத்துவமனை கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது.
மருத்துவ பட்டப் படிப்பு, இஸ்ரோவுடன் இணைந்த தொலை மருத்துவம் மற்றும் தொலை கல்வி திட்டங்கள் இதில் அடங்கும். இங்கு பயின்ற இரண்டு மருத்துவர்கள் தேசிய தங்கப் பதக்கம் வென்றனர்.
இது, இங்கு கற்பிக்கப்படும் கல்வித் தரத்தின் சிறப்பை வெளிப்படுத்துகிறது.
நோய்க்கு பிந்தைய பராமரிப்பு - சாய் ரீஹாபிலிடேஷன் திட்டம், பீஹார், உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து இதய அறுவை சிகிச்சை செய்த நோயாளிகள், வீட்டிலேயே சரியான பராமரிப்பு பெற வேண்டும் என்ற நோக்கில், சாய் ரீஹாபிலிடேஷன் திட்டம் துவங்கப்பட்டது.
இது தற்போது 11 மாநிலங் களில் வெற்றிகரமாக நடைமுறையில் உள்ளது. நோயாளிகள் தங்கள் ஊர்களிலேயே சோதனைகள் செய்து, மருத்துவமனையுடன் தொடர்பில் இருந்து சுகாதாரத்தை பராமரிக்கின்றனர்.
வெறும் ஆறு மாதங்களில் கட்டமைக்கப்பட்ட இந்த மருத்துவமனை, 300 படுக்கைகள், 14 அறுவை சிகிச்சை அறைகள், 24 மணி நேர அவசர பிரிவு உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
இந்தியா மட்டுமல்லாது, பல்வேறு நாடுகளிலிருந்தும் நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற
வருகின்றனர். இந்த மருத்துவமனை, ஒரு மருத்துவமனை போல் தெரியாது; அது ஒரு பெரும் கோவில் போல தோற்றமளிக்கிறது.
முகப்பு பகுதியே பிரார்த்தனை மண்டபத்துடன் துவங்குகிறது. அங்கு பிரார்த்தனை எடுத்த உடனேயே, நோயாளியின் பாதி நோய் மறைந்து விடுகிறது.
பார்க்கும் இடங்களில் எல்லாம், உங்கள் மருத்துவர் பகவான் சத்ய சாய்பாபா என்ற நம்பிக்கை வாசகம் எழுதப்பட்டிருக்கிறது. இது, மீதி நோயை குணப்படுத்தி விடுகிறது.
இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பு பவர்கள் நேரில் தான் செல்ல வேண்டும். இங்குள்ள ரயில் நிலையம், பெரும்பாலான பிரதான ரயில் நிலையங்களுடன் இணைக்கப்பட்டு உள்ளது.
மேலும் மருத்துவமனை பற்றியும், அங்கு சிகிச்சை பெறுவது பற்றியும் விபரம் அறிய
இப்படி இந்த மருத்துவ மனையில் இருக்கும் சிறப்புகள் இன்னும் பல உள்ளன.
பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா அடிக்கடி கூறுவது இது தான்:
மனித குலத்தைப் பேணி, அனைவருக்கும் ஆனந்தம் நிறைந்த வாழ்க்கை தரும் பணியில் நான் இருக்கிறேன். வறியவர்களின் துயரை நீக்கி, அவர்கள் இழந்ததை வழங்குவதே என் பணி!
அவரது வார்த்தைகள், இந்த மருத்துவமனையின் ஒவ்வொரு அங்குலத்திலும், ஒவ்வொரு சேவையிலும் உயிர்ப்புடன் காணப்படுகின்றன.