ரேணுகாதேவி மறுபிறவி எடுத்த சந்திரகுட்டி மலை
பதிவு செய்த நாள்
16
செப் 2025 01:09
ஷிவமொக்காவின் சொரப்பின் இருந்து 16 கி.மீ., துாரத்தில் உள்ள சந்திரகுட்டி கிராமத்தில், ரேணுகாம்பா கோவில் அமைந்து உள்ளது. மலை உச்சியில் அமைந்துள்ள இந்த கோவில், புராண ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடமாக பார்க்கப்படுகிறது. ரேணுகா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில், ரேணுகாதேவி மறுபிறவி எடுத்த இடமாகவும் உள்ளது. சந்திரகுட்டி மன்னர் செய்த கடுமையான யாகங்கள், தவங்களால் நெருப்பில் இருந்து பிறந்தவர் ரேணுகாதேவி. இவர், ஜமதக்னி முனிவரை மணந்தார். இந்த தம்பதிக்கு ஆறு பிள்ளைகள் இருந்தனர். இவர்களில் கடைசி மகன் பரசுராமர். விஷ்ணுவின் ஆறாவது அவதாரமாக பார்க்கப்பட்டவர். மணல் பானை ரேணுகாதேவியும், ஜமதக்னி முனிவரும் பெலகாவியின் சவுந்தட்டி ராம்ஷ்ருங் மலை பகுதியில் வசித்தனர். பல சடங்குகள், பூஜைகள் செய்ய கணவருக்கு, ரேணுகாதேவி உதவியாக இருந்தார். தினமும் காலையில் எழுந்து மல்லபிரபா ஆற்றில் குளித்து, முழு கவனத்துடன் கடவுளுக்கு சேவை செய்ததால், மணலால் ஆன பானையில் தண்ணீர் தேங்கி வைக்கும் சக்தி ரேணுகாதேவிக்கு கிடைத்தது. சந்திரகுட்டி மலைக்கு வந்து ஜமதக்னி தவம் செய்த போது, தவத்திற்கு தேவையான தண்ணீரை எடுத்து வர அப்பகுதியில் ஓடும் ஆற்றிக்கு சென்றார் ரேணுகாதேவி. அங்கு குளித்து கொண்டு இருந்த கந்தர்வ ராஜா சைத்ரதா அழகில் மயங்கி, அவரையே பார்த்து கொண்டு இருந்த ரேணுகாதேவி, தண்ணீர் எடுத்து செல்ல மறந்து விட்டார். தலை துண்டிப்பு தண்ணீர் எடுத்து வராததால் தனது தவத்திற்கு இடைஞ்சல் ஏற்பட்டதால் கடும் கோபம் அடைந்தார் ஜமதக்னி. ரேணுகாதேவியை அடித்து, ஆடைகள் இன்றி விரட்டி விட்டார். உடலில் வேப்பிலையை சுற்றி கொண்டு சந்திரகுட்டி மலையில் உள்ள குகையில் வந்து தஞ்சம் புகுந்தார் ரேணுகாதேவி. ஆனாலும் கோபம் குறையாத ஜமதக்னி, தனது முதல் 5 மகன்களையும் அழைத்து தாயின் தலையை வெட்டி வரும்படி கூறினார். இதற்கு 5 மகன்களும் ஒப்பு கொள்ளவில்லை. இதனால் அவர்களை சிலை ஆக்கினார். ஆறாவது மகன் பரசுராமர் மட்டும் தந்தை சொல்படி தாயின் தலையை வெட்டினார். மகனை நினைத்து பெருமைப்பட்ட ஜமதக்னி, உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க, தாய்க்கும், சகோதரர்களுக்கு மறுபிறவி கொடுக்கும்படி கேட்டார். அதன்படி ரேணுகாதேவிக்கும், ஐந்து பிள்ளைகளுக்கு மறுபிறவி கொடுத்தார் ஜமதக்னி. தற்போது ரேணுகாதேவி வசித்த குகையில் அவரது சிலை உள்ளது. பரசுராமர் அந்த குகையில் வைத்து தான் ரேணுகாதேவியின் தலையை வெட்டியதால், பாறைகளில் ரத்த கறை படிந்தது போன்று காணப்படும். எத்தனை முறை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ததாலும், அந்த கறை இன்னும் போகவே இல்லை. கடம்ப மன்னர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்கள், குகைக்குள் இருக்கும் ரேணுகாதேவியை தரிசனம் செய்து விட்டு, பரசுராமர் உள்ளிட்ட சாமி சிலைகளையும் தரிசனம் செய்கின்றனர். கோவில் பாறையில் சிங்கம், அணிவகுத்து செல்லும் யானைகள், கோபுரங்கள், மலர் வடிவமைப்பு பதிக்கப்பட்டு உள்ளன. இவை கடம்ப மன்னர்கள் கால கட்டட கலையை குறிக்கிறது. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். கோவிலின் நடை தினமும் காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரையும், மாலை 4:30 மணி முதல் இரவு 6:30 மணி வரையும் திறந்திருக்கும். பெங்களூரில் இருந்து சந்திரகுட்டி, 392 கி.மீ., துாரத்தில் உள்ளது. மெஜஸ்டிக்கில் இருந்து சொரப்புக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் உள்ளது. சொரப் சென்று அங்கிருந்து, 16 கி.மீ., துாரத்தில் உள்ள கோவிலுக்கு, உள்ளூர் பஸ்களில் செல்லலாம். உத்தர கன்னடாவின் சிர்சியில் இருந்து 17 கி.மீ., துாரத்தில் கோவில் உள்ளது. ரயிலில் சென்றால் தாளகுப்பா ரயில் நிலையத்தில் இறங்கி செல்ல வேண்டும்.
|