சிலிகான் சிட்டி என்று அழைக்கப்படும் பெங்களூரு, உலக பிரசித்தி பெற்ற நகராகும். இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா, அரண்மனை, கோட்டைகள் என, பல்வேறு சுற்றுலா தலங்கள், புராதன கோவில்கள் உள்ளன. இங்குள்ள பிரசன்ன கணபதி கோவிலும் மிகவும் பிரசித்தி பெற்றது. பெங்களூரின் கோரமங்களாவில், பிரசன்ன கணபதி கோவில் அமைந்துள்ளது. 1979ல் இக்கோவில் கட்டப்பட்டது. கணபதி சேவா கமிட்டியினர் இக்கோவிலை கட்டினர். பெங்களூரின் பல்வேறு இடங்களில் விநாயகர் கோவில் இருந்தாலும், இந்த கோவிலுக்கு தனிச்சிறப்பு உள்ளது.
கோரமங்களா மிகவும் பிரசித்த பெற்ற வர்த்தக பகுதியாகும். கோரமங்களா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில், ஐ.டி., நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இவற்றில் பணியாற்றும் மென் பொறியாளர்களுக்கு, பிரசன்ன கணபதி மீது பக்தி அதிகம். பணி அழுத்தத்தால் அவதிப்படுவோர், பதவி உயர்வை எதிர்பார்ப்போர், பணியில் சாதனை செய்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள், நிறுவனத்தில் உயர் அதிகாரிகளின் தொந்தரவுக்கு ஆளானவர்கள், இக்கோவிலுக்கு வந்து வேண்டுதல் வைத்தால், விருப்பங்கள் நிறைவேறும் என்பது, மக்களின் நம்பிக்கையாகும். பலருக்கும் வேண்டுதல் நிறைவேறி உள்ளது.
இதே காரணத்தால், ஐ.டி., ஊழியர்களுக்கு பிடித்தமான கோவிலாக திகழ்கிறது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களில், ஐ.டி., நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கையே அதிகம். எனவே இக்கோவில், சாப்ட்வேர் இன்ஜினியர்கள் கோவில் என்ற பெயர் பெற்றுள்ளது. கோவிலுக்கு தாராளமாக காணிக்கை செலுத்துகின்றனர். இந்த காணிக்கை தொகையை, கோவிலின் மேம்பாட்டுக்கும், சமூக நலத்திட்டங்களுக்கும் நிர்வாகத்தினர் செலவிடுகின்றனர்.
வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், சங்கஷ்ட சதுர்த்தி உள்ளிட்ட சிறப்பு நாட்களில் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆண்டுதோறும் திருவிழா நடக்கிறது. விநாயகர் சதுர்த்தி மிகச் சிறப்பாக கொண்டாடுகின்றனர். கல்வியில் பின்தங்கியுள்ள குழந்தைகளை இக்கோவிலுக்கு அழைத்து வந்து, விநாயகரை தரிசனம் செய்தால், அவர்களின் கல்வித்திறன் அதிகரிக்கும் என்பது பெற்றோர் நம்பிக்கை. எனவே குழந்தைகளை அழைத்து வருகின்றனர். பெங்களூருக்கு வரும் சுற்றுலா பயணியர், ஒரு முறை சாப்ட்வேர் கணபதியை தரிசிக்க மறக்காதீர்கள்.
எப்படி செல்வது?
பெங்களூரின் கோரமங்களாவின், கே.ஹெச்.பி., காலனியில், சாப்ட்வேர் கணபதி கோவில் அமைந்துள்ளது. நகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும் கோரமங்களாவுக்கு பி.எம்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. வாடகை டாக்சி, ஆட்டோ வசதியும் உள்ளது. வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ரயிலில் மெஜஸ்டிக் பஸ் நிலையம், ரயில் நிலையம், மைசூரு சாலையின் சாட்டிலைட் பஸ் நிலையத்தில் வந்திறங்குவோர், வாடகை வாகனங்களில் கோரமங்களாவில் உள்ள கோவிலுக்கு செல்லலாம். தரிசன நேரம்: காலை 6:30 மணி முதல், 11:30 மணி வரை, மாலை 5:30 மணி முதல், இரவு 8:30 மணி வரை. தொலைபேசி எண்: 080 2553 2568.