குலசேகரப்பட்டணம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23செப் 2025 10:09
தூத்துக்குடி; குலசேகரப்பட்டணம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஓம் காளி, ஜெய் காளி கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கர்நாடக மாநிலம் மைசூரு நடக்கும் தசரா விழாவிற்கு அடுத்தபடியாக குலசேகரப்பட்டினம், ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயில் தசரா விழா சிறப்பகாக நடக்கும். இதில் தென் மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் விரதமிருந்து, காளி, மாரியம்மன், மாறு வேடங்கள் போட்டு, பொதுமக்களிடையே காணிக்கை வசூலித்து கோயிலில் கொண்டு சேர்ப்பார்கள். விழாவின் துவக்கமாக இன்று அதிகாலை அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிபட்டம் வீதியுலா நடந்தது. தொடர்ந்து, 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து வந்தனர். பின் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். 12 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை, மதியம், மாலையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். விழா நாட்களில் தினமும் இரவு 10 மணியளவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவில் வரும் 2ம் தேதி மகிஷா சூரசம்ஹாரமும், 3ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலையில் அம்மன் தேர் பவனியும் நடைபெற உள்ளது.