மேலைத்திருப்பதி பெருமாள் கோவில் புரட்டாசி திருவிழா; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2025 02:09
அன்னூர்; கோவை அருகே மேலைத் திருப்பதி என்று அழைக்கப்படும் மொண்டிபாளையம் பெருமாள் கோவில் புரட்டாசி திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
கோவை மாவட்டம், அன்னூர் அடுத்த மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில் 400 ஆண்டுகள் பழமையானது. மேலைத்திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. இங்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பர். இன்று அதிகாலை 4:00 மணிக்கு மகா அபிஷேகமும், திருமஞ்சனமும் நடந்தது. வெங்கடேச பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். கோவில் சார்பிலும், தனியார் சார்பிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. காலை 10:00 மணிக்கு அச்சம்பாளையம் செல்வ விநாயகர் குழுவின் இசைக் கச்சேரி நடந்தது. மதியம் இடிகரை பள்ளி கொண்ட அரங்கநாதர் குழுவின் பஜனை நடந்தது. கோவில் முன்புறம் 500க்கும் மேற்பட்ட தாசர்கள் பெருமாளை சேவித்தபடி சங்கு ஊதி வழிபாடு செய்தனர். பக்தர்கள் பலர் அரிசி, பருப்பை தாசர்களுக்கு படைத்து வணங்கினர். பக்தர்கள் இரண்டு மணி நேரம் வரிசையில் காத்திருந்து பெருமாளை வணங்கினர். திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம் மற்றும் புளியம்பட்டியில் இருந்து அரசு போக்குவரத்துக் கழக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். வரும் 4ம் தேதி காலை 4:00 மணிக்கு மகாபிஷேகமும் இரவு 7:30 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.