சதுரகிரியில் நவராத்திரி விழா அம்பு விடும் நிகழ்ச்சியுடன் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02அக் 2025 09:10
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழா இன்று அம்மன் அம்பு விடும் நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது.
இக்கோயிலில் நவராத்திரி திருவிழா 9 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். வழக்கம் போல் இந்த ஆண்டும் செப்., 23 அதிகாலை ஆனந்த வல்லி அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. தினமும் இரவு 7:00 மணிக்கு மேல் கொலு பஜனை சிறப்பு வழிபாடு நடந்தது. நிறைவு நாளான இன்று ஆனந்த வல்லி அம்மன், மகிஷாசுரனை அம்பு விட்டு அழிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை அம்மனுக்கு சிறப்பு பூஜை முடிந்து பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் சென்று வழிபாடு செய்தனர். மதியம் 12:30 மணிக்கு கோயிலில் இருந்து அம்மன் மகிஷாசுர வர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி மேளதாளத்துடன் ஊர்வலம் சென்று, வாழைமர உருவில் இருந்த அரக்கனை அம்பு விட்டு அழிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பெண்கள் முளைப்பாரியை ஆற்றில் கரைத்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் அறநிலையத்துறையினர் செய்தனர். வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசார், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.