வால்பாறையில் பருவமழைக்கு பின், வனவளம் பசுமையாக மாறியதால், யானைகள் அதிக அளவில் நடமாடுகின்றன. வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில், நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. பகல் நேரத்தில் தேயிலை தோட்டங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியிலும், இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் முகாமிட்டு, வீடு மற்றும் கடைகளை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள ரொட்டிக்கடை ஆலமரம் மூனீஸ்வர சுவாமி கோவில் அருகே, பகல் நேரத்தில் ஒற்றை யானை தேயிலை காட்டில் முகாமிட்டது. இதனால், பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாமலும், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமலும் தவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், யானையை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால், கோவிலுக்கு வந்த பக்தர்களும், தொழிலாளர்களும் நிம்மதியடைந்தனர். வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.