பதிவு செய்த நாள்
28
டிச
2012
03:12
எவருக்கும் உரிய மரியாதை தருகின்ற கன்னிராசி அன்பர்களே!
புத்தாண்டில் சனி, ராகு, ராசிக்கு இரண்டிலும் கேது ராசிக்கு எட்டாம் இடத்திலும் உள்ளனர். இந்த அமர்வு சில சிரமமான பலன்களைத் தரும். இருப்பினும், குரு பாக்ய ஸ்தானத்தில் மே 28 வரை இருந்து அளப்பரிய நற்பலன்களை வழங்குவார். அவர் மிதுனத்திற்கு பெயர்ச்சியான பின் ஐந்தாம் பார்வை சனி, ராகு கிரகங்களின் மீது பதிகிறது. இதனாலும் கெடுபலன் ஓரளவு குறைந்து நன்மை உண்டாகும். சிந்தித்து செயல்பட்டால் தான் சிகரத்தை எட்டிப் பிடிக்க முடியும். நல்ல எண்ணத்துடன் பேசினாலும் உங்களைச் சிலர் குறை கூற நேரிடும். இதனால், அடிக்கடி மன சஞ்சலத்திற்கு ஆளாவீர்கள். பணிகளில் கவனத்துடன் ஈடுபடுவதால் மட்டுமே மக்கள் மத்தியில் நற்பெயரைத் தக்க வைக்க முடியும். வீடு, வாகனத்தில் திருட்டு பயத்தை தவிர்க்க உரிய பாதுகாப்பு நடைமுறையைப் பின்பற்றுவது அவசியம். வாகன பயணத்தில் நிதானத்தைக் கடைபிடித்தால் பயணம் இனிமையாகும். புத்திரர்கள் வருட முற்பகுதியில் குடும்ப சூழ்நிலை உணர்ந்தும், பிற்பகுதியில் தமது விருப்பங்களை நிறைவேற்றுவதில் பிடிவாத குணத்துடனும் செயல்படுவர். அவர்களை பொறுமையுடன் வழிநடத்துங்கள். பூர்வ சொத்துக்களில் வருமானம் சுமாராக இருக்கும். வீடு, வாகன வகையில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். சிலர் குடும்ப தேவைக்காக சொத்தின் பேரில் கடன் பெறுகிற சூழ்நிலை உருவாகும். நம்பகமானவர்களிடம் மட்டும் கடன் பெறுவது நல்லது. உடல்நலனில் அக்கறை தேவை. சத்தான உணவு உண்பது, சீரான ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. தம்பதியர் எதிர்கால நன்மை கருதி ஒற்றுமையுடன் செயல்படுவது அவசியம். ஒருவருக்கொருவர் குடும்ப விஷயம் குறித்து வாக்குவாதம் செய்வது கூடாது. பெருந் தன்மையுடன் விட்டுக் கொடுப்பது நன்மை தரும். நண்பர்களின் உதவியும், ஒத்துழைப்பும் தேவையான சமயத்தில் கிடைக்கும். ஆடம்பர எண்ணத்தைக் குறைத்து செலவைக் கட்டுப்படுத்த முயற்சிப்பீர்கள். குருவருளால் திட்டமிட்டபடி குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். தந்தைவழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் சார்ந்த வகையில் கடின உழைப்பு, விடாமுயற்சியால் முன்னேற்றம் காண்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வெளிநாடு வேலைவாய்ப்பு பெற முயற்சிப்பவர்களுக்கு ஓரளவே அனுகூலம் உண்டு.
தொழிலதிபர்கள்: அளவான உற்பத்தி, சுமாரான லாபம் என்கிற நிலை இருக்கும். கடந்த காலத்தில் அதிருப்தி மனப்பாங்குடன் விலகிச்சென்ற ஒப்பந்ததாரர்கள், மீண்டும் சரக்கு கொள்முதல் செய்ய வருவர். விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவீர்கள். நிர்வாகத்தில் நடைமுறைச் செலவு கட்டுக்கடங்காமல் போகும். சிக்கனம் கடைபிடிப்பது நல்லது. பணியாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவே கிடைக்கும். தொழிலாளர் பிரச்னையைச் சமாளிக்க பணச்செலவு ஏராளமாகும்.
வியாபாரிகள்: வாடிக்கையாளர்களிடம் பெற்ற நன்மதிப்பை பாதுகாப்பதில் அக்கறை தேவைப்படும். புதிய உத்திகளைப் பின்பற்றி புதிய வாடிக்கையாளர்களைக் கவர முயற்சிப்பீர்கள். மிதமான விற்பனை, அளவான வருமானம் கிடைக்கும். குடோன்களில் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம். சக வியாபாரிகளிடம் நல்லுறவை உருவாக்கி சில நன்மைகளைப் பெறுவீர்கள். வெளியூர்ப் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும்.
பணியாளர்கள்: பணிபுரியும் இடங்களில் விழிப்புடன் செயல்படுவதால் மட்டுமே குளறுபடி வராத நன்னிலை அமையும். நிர்வாகத்தின் வழிகாட்டுதலை பின்பற்றுவது நல்லது. எதிர்பார்த்த கடனுதவி வந்து சேரும். சக பணியாளர்களால் பணிச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும் வருமானத்திற்கு குறைவிருக்காது. எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் ஒருமுகத்தன்மையுடன் செயல்பட்டால் மட்டுமே பணி இலக்கை நிறைவேற்ற முடியும். சலுகை பெறுவதில் ஓரளவே அனுகூலம் உண்டு. குடும்பச் செலவுகளை நிறைவேற்ற பணவசதி சீராக கிடைக்கும். குடும்பப் பெண்கள் சிக்கனத்தைக் கடைபிடிப்பது நல்லது. கணவருடன் கருத்து பேதம் வளராத வகையில் ஒற்றுமையைப் பேணுவது நல்லது. சுயதொழில் புரியும் பெண்கள் விடாமுயற்சியால் உற்பத்தி, விற்பனையை பாதுகாத்துக்கொள்வர்.சராசரிபணவரவுகிடைக்கும்.
மாணவர்கள்: படிப்புச் செலவுக்கான பணவசதி ஓரளவே கிடைக்கும். அன்றாடப் பாடங்களை அன்றன்றே படிப்பது அவசியம். நண்பருடன் வீண்பொழுது போக்குவது கூடாது. பயணத்தில் மிதவேகம் அவசியம். பெற்றோரின் வழிகாட்டுதலை ஏற்று நடப்பது எதிர்கால நன்மைக்கு வழிவகுக்கும். படிப்பு முடிந்து வேலை தேடுபவர்களுக்கு விடாமுயற்சி தேவைப்படும்.
அரசியல்வாதிகள்: வருட முற்பகுதியில் அரசியல் பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். பிற்பகுதியில் தொய்வு ஏற்படும். ஆதரவாளர்களிடம் நன்மதிப்பு பாதிக்காது என்றாலும், சில தருணங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதால் அவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவதில் தாமதம் உண்டாகும்.
விவசாயிகள்: விவசாயச் செலவுக்கான பணம் பெறுவதில் தாமதம் உண்டாகும். பயிர் வளர்ப்பில் கவனம் செலுத்துவது அவசியம். மிதமான மகசூலும், அதற்கேற்ப வருமானமும் கிடைக்கும்.
பரிகாரம்: பைரவரை வழிபடுவதால் துன்பங்கள் தூள் தூளாகும்.
பரிகாரப் பாடல்:
சீர்கொண்ட செம்பொன் திருமேனியும்
செம்முக மலரும் கார்கொண்ட சட்டையும்
தண்டாயுதமும் கணங்கள் எட்டும்
கூர்கொண்ட மூவிலைச் சூலமும்
கொண்டருள் கூர்ந்த கொன்றைத்
தார்கொண்ட வேணியனே!
காழியாபதுத் தாரணனே!
ஜனவரி: குரு 9ல் இருப்பது நற்பலனைத் தரும். அதேசமயம் சனி, ராகு, கேதுவின் சஞ்சாரம் சிறப்பான பலனைத் தருவதற்கு இல்லை. குருபலம் இருப்பதால் திருமணம், குழந்தைப்பேறு போன்ற சுபநிகழ்ச்சிகள் வீட்டில் நடந்தேறும்.
பிப்ரவரி: குருவின் பலத்தால் ஆரோக்கியம் மேம்படும். மாதகிரகங்களும் அனுகூல பலன் தரும். சிலருக்கு வெளியூர், வெளிநாடு சென்று பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும்.
மார்ச்: நீதிமன்ற வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். நல்ல பணியாட்கள் வந்து சேர்வர். பழைய கடன் பாக்கி அடைபடும். நோய்நொடிகள் பறந்தோடும். எதிரியின் கொட்டம் அடங்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.
ஏப்ரல்: சூரியன், செவ்வாயின் சஞ்சாரத்தால் கெடுபலன் உண்டாகும். வாகனப்பயணத்தில் நிதானம் அவசியம். குருபலத்தால் ஓரளவு பிரச்னையைச் சமாளிக்க முடியும். குடும்பத்தேவை அனைத்தும் சீராக நிறைவேறும்.
மே: நல்லதும் கெட்டதும் கலந்த காலகட்டம் இது என்றால் மிகையில்லை. சுபநிகழ்ச்சிகளில் தடை உண்டாகி மறையும். புதன், சுக்கிரனால் வருமானம் அதிகரிக்கும். மாதக்கடைசியில் எதிர்பார்த்த சுபசெய்தி வந்துசேரும்.
ஜூன்: குரு 10ல் இருப்பதால் தொழிலில் மிகுந்த கவனம் தேவைப்படும். ஏழரைச்சனி, ராகு,கேது, குரு போன்ற கிரகங்களால் கெடுபலன் ஏற்படும். உடல்நிலை அதிருப்தி அளிக்கும். மருத்துவச் செலவு கூடும். எதிரிகளாலும் தொல்லை உண்டாகும்.
ஜூலை: மாத கிரகங்கள் அனுகூலமாகச் சஞ்சரிக்கின்றனர். குடும்பத்தேவை அனைத்தும் நிறைவேறும் விதத்தில் வருமானம் இருக்கும். வெளியூர்,வெளிநாட்டில் இருந்து சுபசெய்தி வந்து சேரும். குடும்பத்தினருடன் வாக்குவாதம் செய்ய இடமுண்டு.
ஆகஸ்ட்: மாதம் முழுவதும் சுமாரான பலன் தான். பண நெருக்கடி அதிகமாகும். வங்கியில் கடன், நிதியுதவி பெற்று தொழிலை சீர்படுத்தும் முயற்சி நிறைவேறும். உடல்நலனில் அக்கறை கொள்வது நல்லது. பிள்ளைகளின் வளர்ச்சி ஆறுதல் அளிக்கும்.
செப்டம்பர்: நண்பர்களின் உதவியைக் கேட்டு பெறுவீர்கள். கண்நோய் உண்டாகலாம் கவனம். கணவன், மனைவி ஒற்றுமை குறையும். பிள்ளைகளாலும் மனவருத்தம் ஏற்படலாம். ஆலய வழிபாட்டு செய்வதன் மூலம் நிம்மதி பெற முடியும்.
அக்டோபர்: சனியால் உடலில் எப்போதும் சோம்பல் மேலோங்கும். உடல்நிலையில் கவனம் தேவைப்படும். மருத்துவச்செலவு செய்ய நேரிடும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபவிஷயத்தில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.
நவம்பர்: குரு வக்ரம் அடைவதால் சாதகமான பலனை எதிர்பார்க்கலாம். வருமானம் பலவழிகளில் வர வாய்ப்புண்டு. திருமண முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். கல்வி வளர்ச்சிக்கான சூழ்நிலை குடும்பத்தில் உருவாகும்.
டிசம்பர்: தொழிலில் லாபம் பன்மடங்கு உயரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டு. புதிதாக வீட்டுமனை, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். சிலருக்கு பூர்விகச் சொத்து கிடைக்கும். மொத்தத்தில் நல்ல காலகட்டம்.