பதிவு செய்த நாள்
28
டிச
2012
03:12
பிறர் கருத்தின் நியாயம் உணர்ந்து செயல்படுகிற துலாம் ராசி அன்பர்களே!
புத்தாண்டில் உங்கள் ராசிக்கு சனி, ராகு ராசியிலும், கேது ஏழாம் இடத்திலும் சில சிரமங்களைத் தரும் சூழ்நிலையில் உள்ளனர். ஜென்மச்சனி, ஜென்மராகு என்கிற நிலையில் ஏழரைச்சனியின் தாக்கம் பலமாக உள்ளது. இருப்பினும், குரு மே 28ல் மிதுனத்திற்கு பெயர்ச்சியாகிறார். அவரது ஒன்பதாம் பார்வைராசியில் பதிவதால், வருட பிற்பகுதியில் மனதில் புதிய சிந்தனைகள் உருவாகி வெற்றி தரும். நீதி, நேர்மையை பின்பற்றுகிற விருப்பம் ஏற்படும்.உங்கள் ராசியான துலாம் சனிபகவானுக்கு கவுரவமான உச்ச பலம் தந்த வீடு ஆகும். அது போல ராகுவும் உங்கள் ராசியான சுக்கிரன் வீட்டில் அசுர குருவுக்கு கட்டுப்பட்டவராக உள்ளார். நண்பர்களான சனி, ராகுவின் இந்த அமர்வு விபரீத ராஜயோகத்திற்கு நிகரானது. இந்த சமயத்தில், நீங்கள் அடைய வேண்டும் என்று நினைக்கும் ஒன்றிற்காக, கடின உழைப்பைத் தந்து, முயற்சியும் செய்தால் போதும். ராஜயோக பலன்களை பெறுவீர்கள்.பிறர் நலனைக் கவனத்தில் கொண்டு பேசுவீர்கள். நல்ல செயல்களை புரிந்து சமூகத்தில் புகழ் பெறுவீர்கள். வீடு, வாகனத்தில் பெறுகிற வசதி திருப்திகரமாக இருக்கும். பூர்வ சொத்து உள்ளவர்களுக்கு, மே 28க்குப் பிறகு, தாராள வருமானம் கிடைக்கும். எதிரிகளாக இருந்து உங்களுக்கு இடைஞ்சல் செய்பவர்களும் இந்த காலகட்டத்தில் பலமிழந்து போவார்கள்.தாய்வழி உறவினர்கள் அன்புடன் நடந்து கொள்வர். புத்திரர்களின் எதிர்கால வாழ்வுக்கு உதவுகிற செயல்களை முன்னேற்பாடாக செய்து மகிழ்வீர்கள். இஷ்ட, குலதெய்வ அருள் பரிபூரணமாக துணைநிற்கும். பல காலம் தொந்தரவு தந்த கடனைச் செலுத்தி நிம்மதி பெறுவீர்கள். உடல்நலத்தில் சிறு பாதிப்பு ஏற்படலாம். இந்த நேரத்தில் கெட்ட வழக்கங்களுக்கு ஆளாகி விடக்கூடாது. இருந்தாலும் நிறுத்தி விட வேண்டும். இல்லாதபட்சத்தில், பெரும் மருத்துவச்செலவை சந்திக்க வேண்டியிருக்கும்.தம்பதியர் அன்புடன் நடந்து குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படுத்துவர். நேர்த்திக் கடனை நிறைவேற்ற ஆலய தரிசனம் செய்ய வாய்ப்பு அமையும். நண்பர்கள் உங்களின் சிறு உதவியையும் பெரிதென கருதி மனம் நெகிழ்வர். தந்தைவழி உறவினர்கள் உங்களுக்குத் தகுந்த ஆலோசனை, வாழ்த்து சொல்லி வாழ்வு சிறக்க உதவுவர்.தொழில் ஸ்தானத்தை உச்சம் பெற்ற சனிபகவான் பத்தாம் பார்வையாக பார்க்கிறார். இதனால் தொழில் நடைமுறையில் சீர்திருத்தம் செய்து வியத்தகு வளர்ச்சி பெறுவீர்கள். மூத்த சகோதரருக்கு தேவையான உதவி செய்து அவர்களின் வாழ்வுமுறை சிறப்பு பெறச்செய்வீர்கள். வெளிநாடு வேலை வாய்ப்பு பெற முயற்சிப்பவர்களுக்கு வருட முற்பகுதியில் அனுகூல பலன் கிடைக்கும். வருட பிற்பகுதியில் இளம் வயதினருக்கு திருமண முயற்சி சிறப்பாக நிறைவேறும்.
தொழிலதிபர்கள்: கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்திப் பணிகளை திறம்பட மேற்கொள்வீர்கள். புதிய தொழில் கருவிகள் வாங்கி உற்பத்தியிலும், தரத்திலும் நல்ல முன்னேற்றம் பெறு வீர்கள். அதிகபட்ச ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தாராள பணவரவு கிடைக்கும். சொத்து வாங்க யோகமுண்டு. குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவீர்கள்.
வியாபாரிகள்: தரமான பொருட்களை கொள்முதல் செய்வதில் அதிக அக்கறையுடன் செயல்படுவர். போட்டி குறையும். வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து விற்பனையில சாதனை இலக்கை அடைவீர்கள். சரக்கு வாகனம் வாங்கவும், புதிய கிளை துவங்கவும் அனுகூலம் உண்டு. சிலருக்கு தொழில் சார்ந்த அமைப்புகளில் கவுரவமான பதவி கிடைக்கும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டுபணி இலக்கை பூர்த்தி செய்வர். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம், பிற சலுகைகள் கிடைக்கும். சக பணியாளர்களுடன் அன்பு வளரும். குடும்பத்தின் முக்கிய தேவைகளை நிறைவேற்ற தாராள பணவசதி துணைநிற்கும். சுயதொழில் துவங்க விரும்புபவர்களுக்கு அதிர்ஷ்டகரமாக நல்ல வாய்ப்பு உருவாகும்.
பெண்கள்: குடும்பப் பெண்கள் கணவரின் அன்பு கிடைத்து மனதில் புத்துணர்வு பெறுவர். வீட்டுச்செலவுக்கு தேவையான பணவசதி திருப்திகரமாக அமைந்து மகிழ்ச்சிகர வாழ்க்கை அமையும். பணிபுரியும் பெண்கள் திறமையை வளர்த்து சிறப்பாக செயல்படுவர். தாமதமான சலுகைகள் எளிய முயற்சியால் வந்துசேரும். சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் கூடுதல் ஆர்டர் கிடைக்கப்பெறுவர். உற்பத்தி, விற்பனை சிறந்து உபரி பணவரவைத் தரும். இளம் பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
மாணவர்கள்: படிப்பில் கூடுதல் கவனம் கொள்வர். தரத்தேர்ச்சி உயர்ந்து நல்ல பாராட்டை பெற்றுத்தரும். வளாகத் தேர்வுகளில் கவுரவமான பணி வாய்ப்பு கிடைக்கும். சக மாணவர்களுடன் நட்பு வளரும். உங்கள் விருப்பங்களை பெற்றோர் மனமுவந்து நிறைவேற்றுவர்.
அரசியல்வாதிகள்: அரசியல் பணியில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். துவங்குகிற பணி சிறப்பாக நிறைவேறும். விவகாரம் தொடர்பாக பேச உங்களை அழைப்பார்கள். அப்போது, இருதரப்பும் திருப்தியாகிற வகையில் தீர்ப்பு அமையாவிட்டால். ஒரு தரப்பு ஆதரவை இழந்து விடுவீர்கள். கவனம்.
விவசாயிகள்: இடுபொருட்கள் தாராள அளவில் கிடைக்கும். கண்ணும் கருத்துமாக செயல்பட்டு மகசூலை உயர்த்துவீர்கள். தானியங்களுக்கு நல்ல விலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் கணிசமான பணவரவு உண்டு. புதிய நிலம் வாங்கும் முயற்சி நிறைவேறும்.
பரிகாரம்: முருகனை வழிபடுவதால் வாழ்வு செழிக்க யோக பலன் வந்து சேரும்.
பரிகாரப் பாடல்:
நாள் என் செயும் வினைதான்
என்செயும் எனை நாடிவந்த கோள்
என்செயும் கொடுங்கூற்று என்செயும்
குமரேசர் இருதாளும் சிலம்பும்
சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே
வந்து தோன்றிடினே!
ஜனவரி: ஜென்மராகு, சனி, அஷ்டமகுரு இவற்றால் சிரமங்களைச் சந்திக்கலாம் கவனம். பயணத்தில் கவனம் தேவை.நிதானமாகப் பேசுவது நல்லது. விடாமுயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் மட்டுமே திட்டமிட்ட செயல்களை நிறைவேற்ற முடியும்.
பிப்ரவரி: புதன், சுக்கிரனின் சஞ்சாரத்தால் பிரச்னைகளைச் சமாளிக்கும் தைரியம் உண்டாகும். உடல்நலனில் அக்கறை தேவைப்படும். கடின அலைச்சலைத் தவிர்க்க முடியாது. கணவன்மனைவி ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட வாய்ப்புண்டு.
மார்ச்: சூரியபலத்தால் ஆரோக்கியம் உண்டாகும். சுபநிகழ்ச்சிகளில் தடைகள் உண்டாகி விலகும். பணிச்சுமை அதிகரிக்கும். எதிரிகளால் பிரச்னை ஏற்படும். பூர்விகச் சொத்தில் மராமத்துச் செலவு எதிர்பாராமல் உண்டாகும்.
ஏப்ரல்: கூட்டுத்தொழில் புரிபவர்களுக்கு சோதனையான காலகட்டம். வாழ்க்கைத் துணையால் சிரமங்களைச் சந்திக்க நேரிடும். விட்டுக்கொடுத்து நடப்பது நன்மைக்கு வழிவகுக்கும். முன்யோசனை இல்லாமல் புதிய முயற்சிகளில் ஈடுபடக்கூடாது.
மே: உடல்நலனில் அக்கறை காட்டுவது நல்லது. வாகனப்பயணத்தில் எச்சரிக்கை கொள்வது அவசியம். வெளியூர்ப்பயணத்தின் மூலம் மிதமான ஆதாயம் கிடைக்கும். சகபணியாளர்களால் ஏற்படும் பணிச்சுமையைத் தவிர்க்க முடியாது.
ஜூன்: குரு 9ல் சஞ்சரிப்பது நல்லது. இது வரை இருந்து வந்த சிரமம் அனைத்தும் படிப்படியாக விலகும். வாழ்வில் நிம்மதி தலைதூக்கும். தொழிலில் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். பங்குதாரர்களிடம் ஏற்பட்ட கருத்துவேறுபாடு மறையும்.
ஜூலை: புதிய பதவி, பணி உயர்வு போன்ற நற்பலன்களை எதிர்பார்க்கலாம். திருமணயோகமும் கைகூடும். குழந்தைபாக்கியம் கிடைக்க வாய்ப்புண்டு. குடும்பத்தினருடன் தீர்த்தயாத்திரை சென்று வருவீர்கள். பிள்ளைகளின் செயல்பாடு பெருமை தரும்.
ஆகஸ்ட்: புதிதாக வீடு, வாகனம் வாங்க வாய்ப்புண்டு. அரசுவிஷயத்தில் ஆதாயம் கூடும். சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நிலப்பிரச்னையில் சாதகமான தீர்வு உண்டாகும். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கப் பெறுவீர்கள்.
செப்டம்பர்: தொழில் ரீதியான வெளியூர், வெளிநாட்டுப் பயணம் செல்வீர்கள். எதிர்பாராத செலவால் கையிருப்பு கரையும். சனிபலம் குன்றி இருப்பதால் மனதில் அவ்வப்போது பயம் ஏற்படும். மருத்துவச் செலவு அதிகரிக்கும்.
அக்டோபர்: ஜென்மராசியில் பல கிரகங்கள் இருப்பதால் வாழ்வில் சிரமம் தென்படும். அடிக்கடி கோபத்திற்கு ஆளாவீர்கள். பணிகள் நிறைவேற காலதாமதம் உண்டாகும். குடும்பத்தில் அத்தியாவசியத் தேவையை நிறைவேற்ற கடன் வாங்க வேண்டிவரும்.
நவம்பர்: குரு வக்ரம் ஆவதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. பல தடைகளைக் கடந்து சுபநிகழ்ச்சி நடத்துவீர்கள். புத்திரர்கள் பிடிவாதகுணத்துடன் நடப்பர். உடலில் எப்போதும் அசதி குடிகொண்டிருக்கும்.
டிசம்பர்: ஆண்டு கிரகங்கள் சாதகமாக இல்லாவிட்டாலும், மாதகிரகங்கள் நற்பலனை வழங்கிடும். குடும்பத்தினருடன் சொத்து தகராறு ஏற்படும். நீதிமன்ற வழக்கில் இழுபறி நிலை நீடிக்கும். செய்தொழிலில் லாபம் சுமார் தான்.