நான்கே வார்த்தை; மனித குலத்துக்கு சத்ய சாய்பாபா வழங்கிய அற்புத செய்தி
பதிவு செய்த நாள்
13
நவ 2025 12:11
பகவான் சத்ய சாய்பாபாவின் நூறாவது பிறந்த நாளை கொண்டாட உலகம் முழுதும் உள்ள பக்தர்கள் தயாராகி வருகின்றனர். “எல்லோரையும் நேசியுங்கள், எல்லோருக்கும் உதவி செய்யுங்கள்” என்று பாபா வழங்கிய செய்தி இந்த பிரபஞ்சம் முழுவதற்குமான எவ்வளவு உயர்ந்த மேன்மையும் அளவற்ற ஆழமும் கொண்ட போதனை என்பதை எண்ணிப் பார்க்க இதை காட்டிலும் பொருத்தமான சந்தர்ப்பம் அமைவது கடினம். நான்கே நான்கு வார்த்தைகள். அதற்குள் புதைந்திருக்கும் அற்புதமான தத்துவத்தின் வீச்சு மதம், நாடு, ஜாதி, மொழி, சித்தாந்தம் என அனைத்து எல்லைகளையும் கடந்து செல்வதை கவனித்தீர்களா? எண்ணற்ற பிரிவுகளாக விலகி நிற்காமல், தன்னலமற்ற கருணையின் கரம் பற்றி, ஒரே இனமாக இணைந்து வாழுங்கள் என்று மனித குலத்துக்கு பாபா விடுக்கும் அன்பான அழைப்பு அல்லவா, இது! அன்பையே செயலாக கொண்ட வாழ்க்கை சத்ய சாய்பாபா ஓர் ஆன்மிக ஆச்சாரியர் மட்டுமல்ல. அவர் உன்னதமான மனிதாபிமானி. மற்றவர்களுக்கு போதித்த நல்ல குணநலன்கள் அனைத்தையும் அணுவளவும் பிசகாமல் சொந்த வாழ்க்கையில் கடைப்பிடித்த மகான் அவர். ஆந்திர மாநிலத்தின் புட்டபர்த்தி எனும் குக்கிராமத்தில் தோன்றிய பாபா, அன்பு சேவை மற்றும் ஒவ்வொரு மனிதனின் உள்ளேயும் உறைந்திருக்கும் தெய்வீகத்தை உணர்தல் என்ற மூன்று தத்துவங்களின் மேலே உலகளாவிய ஓர் ஆன்மிக இயக்கமாக கட்டமைத்த சாதனை எவ்வாறு சாத்தியமானது? இதற்கான பதில் மிகவும் எளிதானது: மனித குலத்துக்கு பாபா விடுத்த செய்தியானது உபதேசங்களையும் வேதங்களையும் மட்டும் சார்ந்திருக்கவில்லை; அது செயலாக்கமாக வெளிப்பட்ட உன்னத தத்துவம். பாபாவின் வழிகாட்டுதலால், கோடானுகோடி மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்த ஏராளமான முன்முயற்சிகள் எடுக்கப்பட்டன. உலக தரம் கொண்ட வசதிகள் கொண்ட சூப்பர் -ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், ஒழுக்கம் மற்றும் பண்புகள் அடிப்படையிலான பாடத்திட்டம் கொண்ட கல்வி நிறுவனங்கள், வறட்சிக்கு பழகிப்போன கிராமங்களுக்கு தடையில்லாமல் தண்ணீர் கொண்டுபோய் சேர்க்கும் பிரமாண்டமான நீர் வினியோக திட்டங்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை. இங்கே கவனமாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், விலை மதிப்பற்ற இந்த சேவைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன. கட்டணம் என்ற வார்த்தையைக்கூட இந்த வளாகங்களில் எவரும் காதாலும் கேட்க முடியாது. ஏனென்றால், சாய்பாபாவை பொறுத்தவரை, மனிதர்களுக்கு சேவை செய்வதை காட்டிலும் மேலான வழிபாடு எதுவுமில்லை. எல்லைகள் இல்லாத அன்பு “அனைவரையும் நேசியுங்கள்” என்று சத்ய சாய்பாபா கூறுவதன் அர்த்தம் என்னவென்றால், அன்பு செலுத்துவதில் நிபந்தனைகளோ எதிர்பார்ப்புகளோ இருக்க கூடாது என்பது தான். ஒவ்வொரு மனிதரும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை தாண்டி சென்று, ஒவ்வொரு மனிதனின் உள்ளேயும் நிறைந்திருக்கும் தெய்வத்தன்மையை அடையாளம் காண வேண்டும் என்பதே பாபாவின் அறிவுறுத்தல். எனவே தான் பாபா அடிக்கடி சொல்வதுண்டு: “உலகில் இருப்பது ஒரே ஒரு ஜாதி - மனித ஜாதி; உலகில் இருப்பது ஒரே ஒரு மதம் - அன்பு என்ற மதம்”. வெறுப்பாலும் அச்சத்தாலும் உலகமே பிளவுபட்டு நிற்கின்ற இன்றைய சூழலில், பாரபட்சம் காட்டாமல் எல்லோரையும் நேசிக்க சொல்கிற பாபாவின் போதனை, காயத்தை குணப்படுத்தும் இதமான மருந்தாக தனித்து தெரிகிறது. ஏழை - பணக்காரன், பக்தன் - நாத்திகன், நோயாளி - ஆரோக்யசாலி என எந்த வேறுபாடும் காட்டாமல் அத்தனை பேரையும் அரவணைத்து நிற்கிறது பாபாவின் அன்பு. அவரை பொறுத்தவரை அனைவருமே அவருடைய குழந்தைகள். ஒவ்வொருவரும் கவுரவத்துக்கும் கவனிப்புக்கும் தகுதி படைத்தவர்கள். வாழ்க்கை முறையாக சேவை “அனைவருக்கும் உதவி செய்” என்பது, எப்போதாவது சில சமயங்களில் செய்கின்ற தான தருமம் கிடையாது. உதவி செய்வதே ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக, வாழ்வு முறையாக இருக்க வேண்டும் என்கிறார். உதவியும் சேவையும் அங்கீகாரம் பெறுவதற்கான ஒரு வழியாக இருந்துவிட கூடாது. அதுவே ஆண்டவனுக்கு செலுத்தும் காணிக்கை என்பதை உணர வேண்டும். பசித்தவருக்கு உணவு வழங்குவதாக இருக்கலாம்; வசதி இல்லாத குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தலாக இருக்கலாம்; முதியவரின் தேவைகளை பூர்த்தி செய்து பராமரிப்பதாக இருக்கலாம்; அவ்வளவு ஏன், மனம் சோர்ந்திருக்கும் ஒருவருக்கு கனிவான ஓரிரு வார்த்தைகள் ஆறுதலாக சொல்வதாக கூட இருக்கலாம். தன்னலம் இல்லாமல் பிறருக்கு நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு உதவியும், சிறிதோ பெரிதோ, உங்களுக்குள் உறைந்திருக்கும் தெய்வீக அம்சத்துடன் இன்னும் நெருக்கமாக உங்களை கொண்டு செல்கின்றது என்பதை மறக்க வேண்டாம். பிரார்த்தனை வார்த்தைகளை உச்சரிக்கின்ற உதடுகளை காட்டிலும், உதவி செய்கின்ற கரங்கள் புனிதமானவை என்று நமக்கு சொன்னவர் சாய்பாபா. அதை வேதவாக்காக ஏற்று, கோடிக்கணக்கான அன்பர்கள் சாய் சேவா அமைப்புகளின் மூலமாக தினம் தவறாமல் உலகெங்கிலும் சேவை செய்வதில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா காலங்களுக்குமான ஒரு செய்தி சத்ய சாய்பாபாவின் நூறாவது அவதார தினத்தை நாம் கொண்டாடும் இந்த காலகட்டம், வேறு எப்போதையும் விட அவரது சேதியை உள்வாங்குவதற்கான தேவையும் அவசரமும் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் ஓர் நிச்சயமற்ற சூழல் தெரிகிறது. போர்களில் உயிர்கள் வீணாக பறி போகின்றன.ஜீவராசிகளுக்கும் சுற்றுச் சூழலுக்குமான இணக்கம் வெகுவாக சிதைந்துபோயிருக்கிறது. குழப்பம் மிகுந்த இன்றைய வாழ்க்கை சமுத்திரத்தை பத்திரமாகவும், கருணையோடும், அமைதியுடனும் கடந்து செல்ல “அனைவரையும் நேசிப்போம், அனைவருக்கும் உதவி செய்வோம்” என்ற பாபாவின் மந்திர சொற்கள் திசைகாட்டும் கருவியாக பயன்படும் என்பதில் ஐயத்துக்கு இடமில்லை. இந்த சொற்களை நாம் நினைவில் நிறுத்தினால் போதாது; அவற்றை நம் வாழ்க்கையாகவே சுவீகரிப்போம்: ஒவ்வொருவர் உள்ளேயும் இருக்கும் தெய்வீகத்தை காண்போம்; பணிவு மாறாமல் சேவை செய்வோம்; அன்பு என்ற பாதையில் நமது அன்றாட பயணத்தை தொடர்வோம். பாபாவின் வாழ்வை கொண்டாடவும், அவரது பணியை தொடரவும் நமக்கு இதைவிட சிறந்த வழி கிடையாது.
|