கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே குலோத்துங்க சோழன் கால, வணிக கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து, உலக தமிழாராய்ச்சி நிறுவன, கல்வெட்டியல் துறை பேராசிரியர் ஜீவா கூறியதாவது: ஆனந்துாரில், கண்டெடுக்கப்பட்ட, 4 அடி அகலம், 5 அடி உயரம் கொண்ட இக்கல்வெட்டில், குலோத்துங்க சோழன் காலத்தை சேர்ந்த சித்திரமேழி பெரிய நாட்டார் என்ற பெரு வணிக குழுவினரால் கட்டப்பட்ட தான்தோன்றீஸ்வரர் சிவன் கோவிலுக்கு, அவர்கள் பொன்னை தானமாக வழங்கியது குறிப்பிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், தாமரைப்பாக்கம் அக்னீஸ்வரர் கோவிலை கட்டிக்கொடுத்த அதே வணிக குழு தான் இவர்கள் என்பதை, ஓய்வுபெற்ற தொல்லியல் ஆய்வறிஞர் பூங்குன்றன் உறுதிப்படுத்தி உள்ளார். கல்வெட்டின் மேல்பகுதியில் திருமகள் உருவமும், வலது, இடது புறங்களில் முறையே சூலம் மற்றும் கத்தி உட்பட ஆயுதங்களும் உள்ளன. கல்வெட்டு, குலோத்துங்க சோழனின், 15வது ஆட்சியாண்டு என்பதை அறிய முடிகிறது. 900 ஆண்டுகள் கடந்த பின்னரும், இந்த ஊர், கடவுளின் பெயர் கல்வெட்டில் உள்ளவாறே இன்றும் புழக்கத்தில் உள்ளது சிறப்பு. இவ்வாறு அவர் கூறினார்.