சென்னை: ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடத்தின், 35வது பீடாதிபதி ஜகத்குரு சங்கராச்சார்யார் ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மகா சுவாமிகளின், 108வது ஜெயந்தி விழா, சென்னை அடையாறில், கடந்த 19 முதல் 23ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடந்தன.
‘சென்னை ஸ்ரீ வித்யாதீர்த்த பவுண்டேஷன்’ சார்பில் நடந்த இவ்விழாவில், மதுரை சின்மயா மிஷனை சேர்ந்த சுவாமி சிவயோகானந்தா, சிறப்பு சொற் பொழிவாற்றினார். அப்போது, ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளின் அருளுரை அடங்கிய, ‘நற்செயல் செய்து நற்கதியடைவோம், பக்திக்கு முக்தி வழி, எது தர்மம்?’ என்ற மூன்று நுால்களை அவர் வெளியிட்டு, ‘இந்த நுால்கள், மனித இனத்திற்கே மிகப் பெரிய பொக்கிஷம்’ என, சிவயோகானந்தா குறிப்பிட்டார். சாஸ்திர பண்டிதர் மகாதேவ மராத்தே என்பவருக்கு, இந்த ஆண்டுக்கான, ‘ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மகா சுவாமிகள் விருது’ வழங்கப்பட்டது. விருதுடன் பாராட்டு பத்திரமும், ரொக்க பரிசும் வழங்கப்பட்டன. முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராமசாமிக்கு, ‘வித்யா பாரதி புரஸ்கார்’ விருது வழங்கப்பட்டது. விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, ஜே.எஸ்.டபிள்யூ., ஸ்டீல்ஸ் நிறுவன தலைவர் முருகன், சென்னை சமஸ்கிருத கல்லுாரி மாணவர்கள் ஐந்து பேருக்கு ஊக்கத்தொகை வழங்கினார். முருகன் பேசுகையில், ‘‘நம் நாட்டு கலாசாரம், பண்பாட்டை காப்பதே மகா சுவாமிகளுக்கு நாம் செலுத்தும் மிகப் பெரிய அஞ்சலி,’’ என்றார். முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி வித்யாசங்கர், சென்னை ஸ்ரீவித்யா தீர்த்த பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணன், அறங்காவலர் ஈஸ்வர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.