காஞ்சிபுரம் – அரக்கோணம் செல்லும் சாலையில், ஒலிமுஹமதுபேட்டை அருகில் சர்வதீர்த்த குளம் அமைந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்குளம், ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகம் சார்பில், பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2011ம் ஆண்டு 45 லட்சம் ரூபாய் செலவில், குளம் துார்வாரப்பட்டு, குளத்தை சுற்றிலும் நடைபாதை, சுற்றுச்சுவருடன் கம்பி வேலி அமைக்கப்பட்டது. இந்நிலையில், சுற்றுச்சுவரின் ஒரு பகுதி விரிசல் ஏற்பட்டும், நடைபாதையில் செடி, கொடிகள் முளைத்து குளக்கரை சீரழிந்த நிலையில் இருந்தது. எனவே, குளத்தை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் ஹிந்து சமய அறநிலையத்துறை, ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகம் சார்பில், காஞ்சிபுரம் சர்வதீர்த்த குளம், புதுப்பொலிவு பெறும் வகையில், 34 லட்சம் ரூபாய் செலவில் சீரமைப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில், குளக்கரையின் உட்புறத்தில் உள்ள நடைபாதை சீரமைக்கப்பட்டு டைல்ஸ் பதித்தல், குளத்தின் வெளிப்புற சுற்றுச்சுவர், குளத்தின் உட்புற தடுப்பு கம்பிகள் சீரமைத்து தடுப்பு கம்பிகளுக்கு வர்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது. டிச., 8 ம் தேதி நடைபெறும், ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக சர்வதீர்த்தகுளம் சீரமைப்பு பணி முடிக்கப்படும் என, ஹிந்து சமய அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.