திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம்; உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் ஏற்ற தடை.. 144 தடை உத்தரவு
பதிவு செய்த நாள்
04
டிச 2025 10:12
திருப்பரங்குன்றம்; மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் மலை உச்சியில் தீபத்துாணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் கலெக்டரின் 144 தடை உத்தரவு, மேல் முறையீட்டு மனுவை காரணம் காட்டி போலீசார் அனுமதி மறுத்தனர். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக்கோரி பக்தர்களும், ஹிந்து அமைப்பினரும் போராட்டம், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இரவு வரை திருப்பரங்குன்றத்தில் பதற்றம் நீடித்தது. இரவு 9:30 மணிக்கு மலைப்பாதை முன் ரோட்டில் மனுதாரர் ராம ரவிக்குமார் தலைமையில் கார்த்திகை தீபம் ஏற்றி, ‘நிச்சயம் தீபத்துாணில் தீபம் ஏற்றுவோம்’ என ஹிந்து அமைப்பினர் சூளுரைத்தனர். நேற்று காலை 16 கால் மண்டபம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிறிய வைரத் தேரில் முத்தங்கி அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க ரத வீதிகளில் தேரோட்டம் நடந்தது. தீபம் ஏற்ற அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, மதுரை தி.மு.க., வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் பாலாஜி சார்பில் வழங்கிய 4 அடி உயரம், மேல்பகுதி இரண்டரை அடி அகலத்திலும், அடிப்பகுதி ஒன்றே முக்கால் அடி அகலத்திலும், 70 கிலோ எடையில், 450 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய தாமிர தீப கொப்பரைக்கு பூஜை நடந்தது. பின்பு தாமிரக் கொப்பரை, நெய், திரி, சூடம் ஆகியவை மலை மேல் வழக்கமாக தீபம் ஏற்றும் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகில் உள்ள மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மண்டபத்தின் மேல் கொப்பரை வைத்து நெய் ஊற்றி திரி அமைத்து தீபம் ஏற்ற தயாராக வைத்தனர். கோயில் மணி அடித்ததும் மலை மேல் மாலை 6:15 மணிக்கு அறநிலையத்துறை சார்பில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. கோயிலில் மூலவர் சுப்ரமணிய சுவாமி முன்பு மூன்று முறை பாலதீபம் ஆரத்தி நடந்தது. இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி 16 கால் மண்டபம் முன்பு எழுந்தருளினார். அங்கு சொக்கப்பனை தீபக் காட்சி முடிந்து சுவாமி ரத வீதிகளில் உலா நிகழ்ச்சியில் அருள் பாலித்தார். நேற்று கார்த்திகையை முன்னிட்டு திருப்பரங்குன்றம், மதுரை, வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வந்தனர். கிராமங்களில் இருந்து வந்த பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து மலை சுற்றி கோயிலில் சுவாமி தரிசனம் செய்து சென்றனர். மலை உச்சியில் ஆய்வு மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிக்குமார், அவரது ஆதரவு மனுதாரர்கள், சோலை கண்ணன் தாக்கல் செய்து இருந்த மனு மீது உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழக்கமான இடங்களை தவிர தீப துாணிலும் கார்த்திகை தீபம் கோயில் நிர்வாகம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இதை எதிர்த்து திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேல் முறையீட்டு மனு மீது எந்த தகவலும் இல்லாததால் தனி நீதிபதியின் உத்தரவின் பேரில் கோயில் துணை கமிஷனர் யக்ஞ நாராயணன், தீப நிபுணர்களுடன் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் ஆய்வு செய்யச் சென்றார். பின்பு மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்காக மண்பானை தயார் செய்து பானை, நெய், திரி, சூடம் ஆகியவை தீபத்துாணுக்கு கொண்டு செல்லப்பட்டது. மாலை 4:00 மணிளவில் தீபத்துாணுக்கு கொண்டு செல்லப்பட்ட மண்பானை, நெய், சூடம், திரி ஆகியவை வழக்கமாக கார்த்திகை தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தின் அருகில் உள்ள மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டது. போலீசாருடன் தள்ளுமுள்ளு இந்நிலையில் ராம ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிமன்றம், மாலை 6:00 மணிக்குள் நீதிமன்ற உத்தரவுப்படி மலை மேல் உள்ள தீப துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். அல்லது மாலை 6:05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தது. 144 தடை உத்தரவு 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் 16 கால் மண்டபத்தில் இருந்து மலை மேல் செல்ல முயன்றனர். அவர்கள் மலைக்கு போகும் பழைய பாதையில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. ஏராளமானோர் போலீஸ் தடுப்பையும் மீறி மலை மீது ஏறிச் சென்றனர். அவர்களை பாதியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாருடன் வாக்குவாதத்திலும், போராட்டத்திலும் ஈடுபட்ட ஹிந்து முன்னணியைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் துணைகமிஷனர் இனிகோ திவ்யன், ‘இப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மீறிச்சென்றால் கைது செய்வோம்’ என எச்சரித்தார். இதைதொடர்ந்து நீதிமன்றம் உத்தரவுபடி ராம ரவிக்குமாருடன் 10 பேர் மட்டும் மலை உச்சிக்கு செல்ல போலீசார் அனுமதித்தனர். ஆனால் சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் வர தாமதம் ஆனதால் அவர்கள் இரவு 8:00 மணி வரை காத்திருந்தனர். ரோட்டில் ஏற்றிய கார்த்திகை தீபம் சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் சூழ, வழக்கறிஞர் சாமிநாதனுடன் மனுதாரர் ராமரவிக்குமார் வந்தார். அவர் மலைமீது ஏறமுயன்றபோது, போலீஸ் கமிஷனர் லோகநாதன் தடுத்தார். நீதிமன்ற உத்தரவுப்படி வந்துள்ளதாக கூறி 10 பேருடன் செல்வதாக கூறினர். போலீசார், ‘‘இங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. எனவே நீங்கள் செல்லக்கூடாது’ என்றனர். ராமரவிக்குமார் போலீசாரிடம், ‘அப்படியானால் நாங்கள் மூன்று பேர் மட்டும் மலைமீது சென்று தீபம் ஏற்ற அனுமதியுங்கள்’ என்றார். அதற்கும் போலீசார் அனுமதிக்க முடியாது என்று மறுத்தனர். ராமரவிக்குமாரிடம் போலீசார், ‘இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவு வரும் வரை காத்திருங்கள். அதன்பின் உத்தரவுப்படி செயல்படுங்கள்’ என்றனர். இதற்கு ராமரவிக்குமார் தரப்பினர், ‘நீதிமன்றம் இன்றுதான் தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளது. நாங்கள் ஏன் நாளை வரை காத்திருக்க வேண்டும். உத்தரவை நிறைவேற்றுங்கள்’ என்றனர். இவ்வாறு வாக்குவாதம் தொடர்ந்தது. மெயின்ரோட்டில் மலைப்பாதை துவங்கும் பகுதியில் போலீஸ் சூழ கமிஷனரும், அவர்களுக்கு எதிரே மலைப்பாதையில் செல்ல தயாராக சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் சூழ ராமரவிக்குமாரும் எதிரும்புதிருமாக நின்றிருந்தனர். இரவு வரை பதற்றம் நீடித்தது. ‘தடையை மீறினால் கைது செய்வேன்’ என கமிஷனர் கூறினார். இன்று (டிச.,4)நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை கண்காணிக்க வேண்டும் என்பதாலும், திருக்கார்த்திகையான நேற்று கட்டாயம் தீபம் ஏற்ற வேண்டும் என்பதாலும் ராம ரவிக்குமார் தலைமையில் ஹிந்து அமைப்பினர் மலைக்கு செல்லும் பாதை முன் ரோட்டில் கார்த்திகை தீபம் ஏற்றி ‘நிச்சயம் தீபத்துாணில் தீபம் ஏற்றுவோம்’ என சூளுரைத்தனர். ஹிந்துக்களின் உணர்வை மதிக்காத தி.மு.க., அரசு: சிறுபான்மையினர் ஓட்டுக்கு ஆசைப்பட்டு நீதிபதியின் 2 தீர்ப்புகளையும் அவமதித்து ஹிந்துக்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளது தி.மு.க. அரசு. தீபத்துாணில் தீபம் ஏற்ற அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதும் முதலில் ‘கலவரம் ஏற்படும்’ என்று பொய் கதை விட்டார் தி.மு.க.,வின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி. வெங்கடேசன். கூடவே காங்கிரசும் தங்களது சிறுபான்மையின ஓட்டு வங்கிக்கு பாதிப்பு வராதவாறு, ஹிந்துக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் தீபத்துாணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக்கூடாது என்றது. இதனால் கூட்டணி நிர்ப்பந்தம், தங்களுக்கான சிறுபான்மையினர் ஓட்டு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தீபம் ஏற்றாமல் பின்வாங்கியது தி.மு.க. அரசு. தேர்தல் அரசியலுக்கு முன்பு நீதிமன்றம் அவமதிப்பு தி.மு.க.வுக்கு பெரிதாக தோன்றவில்லை. அடுத்து மனுதாரரே தீபம் ஏற்றலாம் என நீதிமன்றம் உத்தரவிட்ட உடனே, அதனையும் ஏற்காமல், கலெக்டர் வழியாக 144 தடை உத்தரவு பிறப்பித்து, 2வது நீதிமன்ற அவமதிப்பையும் ஏற்றுக் கொண்டது. பொதுவாக தி.மு.க. அரசு ஹிந்துக்களின் உணர்வுகளுக்கு எப்போதும் மதிப்பளிக்காது என்ற கருத்து உண்டு. அதனை உறுதிப்படுத்துவது போல, தர்ஹா நிர்வாகமே இந்த வழக்கில் எதிர்ப்பு தெரிவிக்காத போது, வரும் தேர்தலை கருத்தில் கொண்டு தி.மு.க., அரசு பிடிவாதமாக ஹிந்துக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படுகிறது. மதுரை போன்ற ஆன்மிக மண்ணில், இது தி.மு.க.,வுக்கு வரும் தேர்தலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மதநல்லிணக்கம் நிலவும் மதுரையில் தி.மு.க., அரசு தான் தேவையில்லாமல் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர் ஹிந்து அமைப்பினர்.
|