பெற்றோரை மதித்து நடக்க வேண்டும்; வாரஹ மகா தேசிகன் சுவாமிகள்
பதிவு செய்த நாள்
06
டிச 2025 05:12
பெ.நா.பாளையம்; "பெற்றோரை மதித்து நடத்தல் வேண்டும்" என, ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் பீடாதிபதி ஸ்ரீ வாரஹ மகாதேசிகன் சுவாமிகள் பேசினார். பெரியநாயக்கன்பாளையம் அருகே மத்தம்பாளையத்தில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தில் தங்கி உள்ள ஸ்ரீ வராஹ மகா தேசிகன் சுவாமிகள் இன்று பக்தர்களிடையே பேசுகையில்," அனைவரும் அறம் சார்ந்த வாழ்க்கை வாழ்வது நல்லது. அது நமக்கு மட்டுமல்லாமல், நம்மை சுற்றி இருப்பவர்கள் அனைவருக்கும் நன்மையை ஏற்படுத்தும். அறத்துடன் வாழ்வது நம் கடமை என்பதை உணர வேண்டும். மாதா, பிதா, குரு, தெய்வத்தை மதித்து நடக்க வேண்டும். தர்ம சிந்தனையோடும், இரக்க உணர்வோடும், அனைவருக்கும் நன்மை பயக்கும் செயல்களில் ஈடுபட வேண்டும். இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழ்வதும் ஒருவகை அறம் தான். சுற்றுச்சூழலை பாதுகாத்து, நாமும், நம் சந்ததியினரும் நன்மை பெற வாழ வேண்டும். வாழ்க்கை வளம் பெற மெய்ஞானமும், விஞ்ஞானமும் வேண்டும். பெரியோர் வாழ்ந்த வாழ்க்கையை, அவர்கள் காட்டிய நல்வழியை பின்பற்றி நடக்க வேண்டும். நம்மை பெற்று வளர்த்த பெற்றோரை ஒரு நாளும் கைவிடக்கூடாது. அவர்கள் மனம் நோகும்படி நடத்தல் கூடாது. நம் வாழ்க்கையில் வெற்றி பெற, பெற்றோர் ஆசி கண்டிப்பாக வேண்டும்" என்றார். வாரஹ மகா தேசிகன் சுவாமிகள் ஜன., 6ம் தேதி வரை தங்கி ஆசி வழங்குகிறார். ஆசிரமத்தில் தினமும் காலை, 6:00 மணி முதல் பகல், 12:00 மணி வரை பெருமாள் ஆராதனை, சாற்றுமுறை, பாராயண கோஷ்டி அடியார்களுக்கு பஞ்சஸம்ஸ்காரம் செய்வித்தல், சரணாகதி, ததியாராதனை ஆகியவை நடக்கிறது. மாலை, 5:00 மணி முதல் பக்தர்களின் இல்லங்களுக்கு பெருமாள் விக்ரகத்துடன் செல்லும் சுவாமிகள், அங்கு பெருமாள் ஆராதனை, சாற்றுமுறை மற்றும் பொன்னடி சாற்றுதல் நடத்தி ஆசி வழங்குகிறார்.
|