திருத்தணி முருகன் கோவில் தேர்வீதியில் தீபம் ஏற்றும் இடத்தில் தீ விபத்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09டிச 2025 10:12
திருத்தணி: திருத்தணி முருகன் கோவில் தேர்வீதியில் நெய் தீபம் ஏற்றும் இடத்தில் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்ததை, கோவில் ஊழியர்கள் தண்ணீர் ஊற்றி அணைத்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். தேர்வீதியில், வேல் மண்டபம் எதிரே நெய்தீபம் ஏற்றும் இடம் கோவில் நிர்வாகம் ஏற்படுத்தியது. அந்த இடத்தில் பக்தர்கள் காலை, 6:00 மணி முதல் இரவு, 8:30 மணி வரை நெய்தீபம், நல்லெண்ணை தீபம் ஏற்றி தங்களது பிரார்த்தனைகள் நிறைவேற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை, 10:00 மணியளவில், 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் நெய் தீபம் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென நெய் தீபங்கள் தீப்பிடித்து எரிய துவங்கியன. தீ மளமளவென பரவியதால், அங்கிருந்த பக்தர்கள் அலறியடித்து ஓடினர். அங்கு பணியில் இருந்த கோவில் ஊழியர்கள் உடனடியாக தண்ணீரை கொண்டு தீயை அணைத்தனர். குறித்த நேரத்தில் தீ விபத்து கட்டுப்படுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விசாரணையில், தீபம் ஏற்றும் இடத்தில் கற்பூரம் அதிகளவில் இருந்ததால் விளக்குகளில் இருந்து தீ பரவியது என தெரிய வந்தது.