காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தியில் ஏழு கங்கை அம்மன் திருவிழா பாரம்பரிய முறையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் புதன்கிழமை (இன்று) அதிகாலை வரை மூலவர் கங்கை அம்மனுக்கு கோவிலில் சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டன. அபிஷேகத்தை தொடர்ந்து அம்மனுக்கு மகாகும்பம் சமர்ப்பிக்கப்பட்டு, நெய்வேத்தியம் மற்றும் மகாபலி கொடுக்கப்பட்டு சிறப்பு ஆரத்தி நடைபெற்றது.
பின்னர் சலவை தொழிலாளி சமூகத்தினர் தலைமையில் களிமண்ணால் செய்யப்பட்ட ஏழு கங்கை அம்மன்களை கோவில் கமிட்டியினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் பிரதிநிதிகள் கங்கை அம்மன்களை அந்தந்தந்த பகுதிகளுக்கு எடுத்துச் சென்று பாரம்பரிய முறைப்படி பூஜைகள் செய்து திருவிழாவை தொடங்கினர்.
பின்னர் சப்பரங்களில் தேவியின் தெய்வீக அருள் பாலிக்கும் வடிவங்களை அலங்கரித்தனர். ஸ்ரீகாளஹஸ்தி நகரில் ஏழு கங்கை அம்மன்கள் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் திருமண மண்டபத்தில் பொன்னாலம்மன், காந்தி வீதியில் அங்கம்மா, கொத்தப்பேட்டை பகுதியில் புவனேஸ்வரி, பிராமண தெருவில் கருப்பு கங்கை அம்மன், சந்தை மைதானத்தில் மூலஸ்தான எல்லையம்மன், பேரி வாரி மண்டபத்தில் முத்தியாலம்மன், சன்னதி தெருவில் அங்காளம்மா போன்ற அலங்காரம் செய்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏராளமானோர் ஏழு கங்கை அம்மன்களை தரிசனம் செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். திருவிழாவையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.