பதிவு செய்த நாள்
02
ஜன
2013
05:01
திருக்கயிலாயப் பரம்பரை தருமபுர ஆதீனத்தின் ஆறாம் பட்டம் மகா சன்னிதானமாக இருந்தவர் திருஞான சம்பந்த தேசிக சுவாமிகள். அவருடைய திருவருளையும் குருவருளையும் பெற, சிறு வயதிலேயே அங்கு வந்து சேர்ந்தார் ஒர் அன்பர். அவர், திருமடத்தில் உள்ள அடியார்களுக்குத் தொண்டு செய்வதையே பெரும் புண்ணியமாகக் கருதி வந்தார். அவரது பிறப்பு, தாய் - தந்தை, ஊர் முதலான விவரங்களை அறியமுடியவில்லைதி ஆதீனத்தில் உள்ள அடியார்கள் இடும் பணியை மிகவும் மகிழ்ச்சியுடன் செய்து வந்தார் அவர். அந்த ஆதினத்தில் இருந்த வெள்ளியம்பலவாணத் தம்பிரான் என்பவரிடம் இவர் இலக்கண - இலக்கிய நூல்களையும் சித்தாந்தங்களை சித்தாந்தங்களைம் கற்றுத் தேர்ந்தார்.
இவரது பக்தி, கல்வியறிவு, ஒழுக்கம், தொண்டு மனப்பான்மை ஆகியவற்றைக் கண்டு மகிழ்ந்தார் மகா சன்னிதானம். அவரிடம் அந்த அன்பரும் ஞானோபதேசம் பெற்று நிஷ்டை புரிந்து ஒழுகினார்.தம்முடைய ஞானாசார்யரிடம் இணையற்ற அன்பும் பக்தியும் பூண்டதால் அந்த அன்பரின் திருநாமம் சம்பந்த சரணாலயர்என்றாகியது. புலமை, ஒழுக்கம், ஞானம், தவம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய சம்பந்த சரணாலயரின் புகழ் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, மைசூர் முதலிய பிரதேசங்களுக்கும் பரவியது. பல இடங்களில் இருந்தும் தருமபுரம் மகா சன்னிதானத்தைத் தரிசிக்க வருவோர் அனைவரும் சம்பந்ந சரணாலயரின் பெருமையையும் உணர்ந்து, அவரை பாராட்டிச் சென்றார். அப்படிச் சென்று வந்த ஒருவர் வாயிலாக சம்பந்த சரணாலயரை உடனே தரிசிக்க வேண்டும் என்று விரும்பினார் மைசூர் மன்னராக இருந்த பெட்ட தசாமராலு உடையார். தமிழ் நூல்களில் ஆர்வமும் அறிவும் பெற்றிருந்த இவர், தமது விருப்பத்தை சுவாமிகளுக்குத் தக்கார் வாயிலாக தெரிவித்தார்.
மைசூர் மன்னரின் விருப்பத்தை அறிந்த சம்பந்த சரணாலயர் அவரைச் சந்திக்கச் சம்மதம் தெரிவித்தார். தமது ஞானாசார்யரிடம் விடைபெற்று மைசூர் வந்தார். மன்னர் பெட்ட தசாமராலு உடையாரைச் சந்தித்தார். இருவரும் நிறைய விஷயங்கøளிப் பகிர்ந்து கொண்டார்கள். சுவாமிகளின் துறவு மற்றும் ஒழுக்கத்தில் மன்னரின் உள்ளம் மிகவும் ஈடுபாடு கொண்டது. எனினும் அவருடைய கரிய திருமேனியைப் பார்த்த மன்னர், அண்டங்காக்கை போல் உள்ளீரே ... என்று வேடிக்கையாகக் கூறினார். உடனே சம்பந்த சரணாலயர் புன்னகையுடன், தாங்களே அண்டங்காக்கைக்குப் பிறந்தவர்தானே...! எனச் சாதுர்யமாகக் கூறினார்.
சம்பந்த சரணாலாயரிடம் இப்படியொரு பதிலை எதிர்பார்க்காத மன்னர் சற்று திகைத்துத்தான் போனார். அவரது எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட சம்பந்த சரணாலயர், அண்டம் என்றால் உலகம்காக்கை என்றால் காப்பதற்கு என்று பொருள். அதனால் தான் அப்படிச் சொன்னேன்! என்று விளக்கம் தர... அவரின் சொல்நயத்தையும் பொருள் நயத்தையும் உணர்ந்து மகிழ்ந்தார் மன்னர்.
சம்பந்த சரணாலயரின் பேச்சிலும் செயல்பாட்டிலும் தனிச்சிறப்பைக் கண்ட மன்னர் , அவரை தெய்வமாகப் போற்றினார். அவரைச் சிலகாலம் தம்முடன் தங்கியிருக்க வேண்டினார். மன்னரின் விருப்பப்படி சம்பந்த சரணாலயரும் அங்கே தங்கினார். அவ்வாறு இருந்த காலத்தில், தமக்கென்று எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, தினமும் பிச்சை எடுத்து உண்ணுவதை வழக்கமாகக் கொண்டிருந்த இவரது வைராக்கியம் மன்னருக்குப் பெரும் வியப்பை ஏற்படுத்தியது.
சம்பந்த சரணாலயர் சொற்பொழிவாற்றும் போது, கச்சியப்ப சிவாச்சார்யர் இயற்றிய கந்தபுராணத்தில் இருந்து சில பகுதிகளை இடையிடையே எடுத்துச் சொல்வார். அதனை மன்னர் மனமுருகிக் கேட்பார் .கந்தபுராணம் மிக விரிவாக இருக்கிறதே ... முருகக் கடவுளின் அந்த சரித்திரத்தைத் தொடர்ச்சியாக கந்தபுராணத்தில் உள்ளபடியே சுருக்கமாகச் சொல்லும் நூல் ஒன்று இருந்தால், எம் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்குமே ! அத்தகைய ஒரு புராணத்தைக் தாங்கள் இயற்றியருள வேண்டும் .என்று வேண்டிக்கொண்டார் மன்னர் .இதுவும் கந்தவேள் கருணையே ! என்று மிகவும் மகிழ்ந்த சம்பந்த சரணாலயர், கந்தபுராணத்தைச் சுருக்கமாகப் பாடத் தொடங்கினார்.முதலில் கீழ்காணும் விநாயகர் காப்புச் செய்யுளை இயற்றினார்.
பொங்கு கந்த புராணச் சுருக்கநூல்
இங்கி சைத்திட வின்பொடு முற்றுவான் .
மங்கை பாலகன் மாதங்க மாமுகப்
புங்க வன்துணைப் பொற்பதம் போற்றுவாம்.
கச்சியப்ப சிவாச்சார்யர் இயற்றிய கந்தபுராணம் சொற்பொருள் நயமும் பக்திச் சுவையும் மிகுந்ததாக இருப்பதால், தமிழ்ப் புலவர்களாலும், முருகப் பெருமானின் அடியார்களாலும் விசேஷமாகப் போற்றப்படுகின்றது. கந்த சஷ்டி விழாவின் 6 நாட்களிலும் அதனைப் பாராயணம் செய்வது மரபு. அது 6 காண்டங்கள். 94 படலங்களுடன் 10,346 செய்யுட்கள் கொண்டது. கச்சியப்பர் பாடிய அந்தப் புராணத்தில் உள்ள வரலாறுகளை சுருக்கி, 1,048 செய்யுட்களில் கந்தபுராணச் சுருக்கம் என்ற நூலை ஆறு பகுதிகளாக இயற்றியுள்ளார் சம்பந்த சரணாலயர்.
தமது விருப்பப்படி சம்பந்த சரணாலயர் இயற்றிய கந்தபுராணச் சுருக்கம் நூலை எங்கே அரங்கேற்றம் செய்யலாம் என்று மன்னர் கேட்டபோது, சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூரில் அரங்கேற்றம் செய்வது மிகவும் சிறப்பு! என்றார் சுவாமிகள். அதற்கான ஏற்பாடுகள் தயாராயின.
அதற்கு முன்னதாக கந்தபுராணச் சுருக்கம் நூலின் பெருமையையும், மகிமையையும் அறிந்த மைசூர் மன்னர், சுவாமிகளுக்குக் காணிக்கையாகப் பொன்னும் மணியும் வழங்கினார். எதிலும் பற்றற்றவராக வாழ்ந்து வந்த சுவாமிகள், இவை எம் குரு மூர்த்திகளின் திருவடிகளுக்கு ஆகுக என்று அதை வைத்துவிட்டார். மன்னரும் மீண்டும் பொன்னும் மணியும் அளிக்க, இவை முருகப்பிரானுக்கு ஆகுக என்றார். மன்னர் விடவில்லை. மூன்றாவது முறையும் பொன், பொருள் கொடுத்தார். அவற்றை, இவை அடியார்களுக்கு ஆகுக என்று வைத்துவிட்டார் சுவாமிகள். அவரின் வைராக்கியச் சிறப்பைக் கண்ட மன்னர், சம்பந்த சரணாலய சுவாமிகளைச் சிவிகையில் எழுந்தருளச் செய்து, நகர்வலம் செய்விக்க விரும்பினார். அதை அறிந்த சுவாமிகள், குருநாதர் திருவுள்ளக் கருத்தறியாமல் இதனைச் செய்யோம் என்று கூறிவிட்டார். மன்னரும் தருமபுர ஆதீன பண்டார சன்னதிகளைத் தொடர்பு கொண்டு, அவரது சம்மதம் பெற்று, நகர்வலம் செய்வித்து மகிழ்ந்தார்.
பிறகு தமது குருநாதரின் ஆசியுடன் திருச்செந்தூர் முருகன் ஆலயத்தை அடைந்த சம்பந்த சரணாலயர், கந்தபுராணச் சுருக்கம் நூலை அரங்கேற்றி மகிழ்ந்தார். தொடர்ந்து சில காலம் மைசூரில் இருந்த சுவாமிகள், அந்த நாட்டு மன்னரிடமும் மக்களிடமும் விடைபெற்று, திருத்தல யாத்திரை புறப்பட்டார். குன்று தோறாடும் குமரன் தலங்களை வழிபட்டுத்துதித்தவர், தருமபுரத்தை அடைந்தார். தருமை ஆதீன குரு மூர்த்திகள் இவரது பணியைப் பாராட்டி வாழ்த்தினார். அங்கே தங்கியிருந்த காலத்தில், அந்த ஆதீனத்தின் முதல் ஞானாசார்யராகிய ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்தர் மீது சிகாரத்தினமாலை என்ற நூலை இயற்றினார் சுவாமிகள்.
முருகப்பெருமானுக்காகவே தமது வாழ்வை அர்ப்பணித்துக்கொண்ட சம்பந்த சரணாலயர் இயற்றிய கந்தபுராணச் சுருக்கம் நூல், தமிழ் இலக்கியத்தில் மிகச் சிறந்த அணிகலன்களில் ஒன்றாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. கருணை பொழியும் இருகடைக் கண்ணால் பார் புகழும் ஞான சம்பந்தன் எந்தை பரமன் என்று, தமது குருநாதராகிய ஸ்ரீலஸ்ரீ திருஞான சம்பந்த தேசிகரைத் துதிக்கும் சம்பந்தன் சரணாலயர், தமது குருவின் திருவருளாலேயே இந்த நூலை பாடியதாகச் சொல்கிறார்.இவ்வளவு பெரிய நூலைச் சுருக்கி சுவை குன்றாமல் செய்வதற்குரிய தகுதி என்பால் இல்லை; எனக்கும் இதற்கும் எத்தனையோ தூரம்! என்று அவர் கூறுவது அவரது தன்னடக்கத்தைக் காட்டுகிறது.