பதிவு செய்த நாள்
21
டிச
2025
12:12
திருத்தணி: திருத்தணி முருகன் கோவில் சரவணபொய்கை என்கிற குளத்தில் கழிவுதிட்டுக்கள் பரவியுள்ளதால், தண்ணீர் கருப்பாக மாறி துர்நாற்றம் வீசுகிறது. இதனால், பக்தர்கள் நீராடாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
திரு த்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்து செல்கின்றனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற்ற மொட்டை அடித்து, குளத்தில் நீராடி விட்டு சுவாமியை தரிசனம் செய்கின்றனர்.
சில பக்தர் கள் மலைப்படிகளுக்கு செல்லும் வழியில் உள்ள சரவணபொய்கை குளத்தில் புனித நீராடுவது அல்லது கை, கால் மற்றும் முகம் கழுவிய பின், மலைக்கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசிப்பர்.
இந்நிலையில், குளத்தை கோவில் நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், குளத்து நீர் மாசடைந்துள்ளது. தற்போது, குளத்தில் கழிவு திட்டுக்கள் பரவியுள்ளது. மேலும், குளத்தில் இருக்கும் தண்ணீரும் கருப்பாக மாறி துர்நாற்றம் வீசுகிறது.
இதனால், குளத்திற்கு வரும் பெரும்பாலான பக்தர்கள், கருப்பாக இருக்கும் தண்ணீரை பார்த்து முகம் சுளித்தும், நீராடாமல் மூலவரை தரிசிக்கின்றனர். சில பக்தர்கள் கருப்பாக உள்ள குளத்து நீரில் இறங்கி கை, கால், முகம் கழுவியும், குளித்துவிட்டும் செல்கின்றனர்.
எனவே, ஹிந்து அறநிலையத் துறை ஆணைய ர், சரவண பொய்கை குளத்தை பார்வையிட்டு, நிறம் மாறிய தண்ணீரை சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
திருத்தணி கோவில் அதிகாரி கூறியதாவது:
பக்தர்கள் வேண்டுதல் எனக் கூறி, வெல்லக் கட்டிகளை குளத்தில் வீசுகின்றனர். காவடிகளுடன் வரும் பக்தர்கள், குளத்தில் பூமாலையை வீசிவிட்டு செல்கின்றனர்.
இதனால், தண்ணீர் கருப்பாக மாறியுள்ளது. நாங்களும், ஒப்பந்த தொழிலாளர்கள் மூலம் குளத்தில் இருக்கும் பூமாலைகள் மற்றும் கழிவுகளை அகற்றி வருகிறோம்.
இனிவரும் காலத்தில், குளம் அமைந்துள்ள பகுதியில் ஊழியர்களை பணியில் அமர்த்தி, வெல்லம் மற்றும் பூமாலைகள் போடுவது தடுக்கப்படும் .