பதிவு செய்த நாள்
03
ஜன
2013
10:01
பெரம்பலூர்: அரும்பாவூர் சிவன் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி, 25 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில், அரும்பாவூர் சிவன் கோவிலில் அகல் விளக்குகள் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் புத்தாண்டு தினத்தையொட்டி, ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அகல் விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி., ராஜசேகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதில் அரும்பாவூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் ராமசாமி, செயல் அலுவலர் தங்கரசுந்தரேஸ்வரன் ஆகியோர் உட்பட, ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்று விழாவை சிறப்பாக நடத்தினர். 13 ஆண்டுகளுக்கு பிறகு காமாட்சி அம்மனுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. அரும்பாவூர், அ.மேட்டூர், தழுதாழை, பூலாம்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும், பக்தர்களும் சிவன் கோவில் வளாகத்தை சுற்றி, 25 ஆயிரம் அகல் விளக்குகளை ஏற்றி, ஸ்வாமி தரிசனம் செய்தனர். புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அரும்பாவூர் பொதுமக்கள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.