போத்தனூர்: சுந்தராபுரம் மணிகண்டன் அய்யப்ப பக்தர்கள் சங்க, 49ம் ஆண்டு விழா, சுந்தராபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் துவங்கியது. அய்யப்ப பூஜை, லட்சார்ச்சனை, உச்சி கால பூஜையுடன் பிரசாதம் வழங்குதல், மாலை திருவிளக்கு வழிபாடும் நடந்தன. இரவு பரத நாட்டியம், மஹா தீபாராதனை, ஹரிவராசனம் நடந்தன. நேற்று காலை, 8:00 மணிக்கு அய்யப்ப பூஜை துவங்கியது. தொடர்ந்து பக்தி பாடல்கள் மதியம் உச்சி கால பூஜை, அன்னதானம் நடந்தன. இரவு, குறிச்சி குளக்கரையிலுள்ள பொங்காளியம்மன் கோவிலிலிருந்து அலங்கரிக்கப்பட்ட அய்யப்பன் திருவுருவ சிலை வாகனத்தில் பின்தொடர, சிறுமியர், பெண்கள் தீபத்தட்டு ஏந்தி வர, சரண கோஷத்துடன் ஊர்வலம் துவங்கி, பொள்ளாச்சி நெடுஞ்சாலை, சங்கம் வீதி வழியே முத்துமாரியம்மன் கோவிலை சென்றடைந்தது. அங்கு தாயம்பகை நடந்தது. இறுதியாக மஹா தீபாராதனை, ஹரிவராஸனத்துடன் விழா நிறைவடைந்தது.