ஸ்ரீ மகா விஷ்ணு கோவிலில் யதி பூஜை செய்து " யதி சாப "நிவர்த்தி பெற்ற பக்தர்கள்
பதிவு செய்த நாள்
25
டிச 2025 04:12
பந்தலூர்; பந்தலூர் அருகே பொன்னானி ஸ்ரீ மகா விஷ்ணு கோவிலில், யதி பூஜை நடத்தப்பட்டது. பந்தலூர் அருகே பொன்னானி ஸ்ரீ மகா விஷ்ணு கோவிலில், கோவில் வளர்ச்சி மற்றும் ஊர் நன்மைக்காக தாம்பூல பிரசன்னம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரசன்னா பரிகாரங்களில் ஒன்றான, "யதி சாப" நிவர்த்திக்காக, " யதி பூஜை"நடத்தப்பட்டது. கோவில் புனரமைப்பு கமிட்டி நிர்வாகி சுதீஷ் வரவேற்றார். தலைவர் வினோத் தலைமை வகித்தார். சிறப்பு பூஜைகளை மேல் சாந்தி சுதீஷ், தந்திரி தணேஷ் ஆகியோர் செய்தனர். பூஜையில் பங்கேற்க வந்த பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் ஸ்ரீமத் சுவாமி ஆத்மதாஸ் யமி - க்கு பூரணகும்ப மரியாதை செலுத்தி செண்டை மேளத்துடன், அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து சுவாமிக்கு பாத பூஜை செய்து, வஸ்திர தானம் வழங்கி, பூக்கள் தூவி பாத பூஜை செய்து சாப நிவர்த்தி பெறப்பட்டது. தொடர்ந்து சுவாமி பேசுகையில், கோவில் மற்றும் வீடுகளில் மட்டுமின்றி, பொது இடங்களிலும் துறவறம் பூண்டவர்களை பார்த்தால், அவர்கள் கோபப்படும் வகையில், நடந்து கொள்ளக் கூடாது. ஏதோ ஒரு காலத்தில் பக்தர்கள் அல்லது கோவில் நிர்வாகத்தால், யாரோ ஒரு துறவறம் பூண்ட சுவாமி கோபப்பட்டு, சாபமிட்டதால் பல்வேறு குறைகள் ஏற்பட்டு இருக்கும். தற்போது சாப நிவர்த்தி பெற்றதன் மூலம், பாவங்கள் தீர்ந்து நன்மை கிடைக்கும். எனவே பிறரை கோபப்பட வைக்காமல், வாழ நாம் பழக வேண்டும் என்றார். கூடலூர் கிரிவலம் சிவன் கோவில் நிர்வாகி, ஆன்மீகப் பெரியவர் நடராஜ் பேசுகையில், விஷ்ணு பகவானை நாடி தினம்தோறும் துதித்தால், பாவங்கள் தீரும். ஆனால் அந்த பகவான் ஆலயத்திலேயே, துறவறம் கொண்ட சாமியை கோபப்பட செய்த சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற நிலை மாற, தினமும் பகவானே தொழுவதுடன், நாம ஸ்லோகங்களை பாடினால், பாவமும் தீரும், உடலும், உள்ளமும் புத்துணர்வு பெறும் என்றார். தொடர்ந்து உண்டியல் சமர்ப்பணம், தீபாராதனை, பஜனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. கோவில் புனரமைப்பு பணி மேற்கொள்ளும் நிலையில், ஆன்மீக அன்பர்கள் சீரமைப்பு பணியில் பங்கு ஏற்று ஒத்துழைக்க வேண்டுமென கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சிற்பி முனைவர் ஹரிதாசன், உலக அமைப்பு கமிட்டி நிர்வாகிகள் புஷ்கரன், உன்னிகிருஷ்ணன், கோபிநாதன், கோபாலகிருஷ்ணன், சதீஷ், வேலாயுதம், ஆசிரியர் சஜி, பிரபாகரன், ராமகிருஷ்ணன், கோவில் மகளிர் குழுவினர், பக்தர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கோவில் மேலாளர் சந்தியா கோபி நன்றி கூறினார்.
|