திருத்தளிநாதர் கோயிலில் இசைத்தூண்கள் நிறைந்த நடராஜர் சன்னதியில் இறைவன் இறைவிக்காக கெளரி தாண்டவம் ஆடிய சிறப்பு பெற்றது. இதனால் தென் சிதம்பரம் என அழைக்கப்படும் இக்கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு விழா கொண்டாடப்படுகிறது. நேற்று இரவில் பிரகாரம் வலம் வந்து உற்ஸவ நடராஜர்-சிவகாமி அம்மன் மூலவர் சன்னதியில் எழுந்தருளினர். இன்று அதிகாலை 4:00 மணிக்கு மார்கழி திருப்பள்ளியெழுச்சி பூஜைகள் நடந்தன. பின்னர் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜர்-அம்பாள் திருநாள் மண்டபம் எழுந்தருளி அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நடராஜர் மூலவர் சன்னதியில் மாணிக்கவாசகர் எழுந்தருளி அவர் சார்பில் ஓதுவார் மாசிலாமணி 21 தேவாரப்பாடல்கள் பாடினார். அடுத்து மாணிக்கவாசகருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அலங்காரத்தில் அருள்பாலித்த நடராஜருக்கு தீபாராதனை நடந்தது. பி்ன்னர் மாணிக்கவாசகர் திருநாள் மண்டபம் எழுந்தருளினார். தொடர்ந்து தேவாரம், திருவாசகம் பாடப்பட்டு நடராஜர்-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. திரளாக பக்தர்கள் எழுந்தருளி நடராஜரை தரிசித்தனர். பின்னர் நடராஜர்-அம்பாள் திருவீதி உலா நடந்தது.