பதிவு செய்த நாள்
04
ஜன
2026
11:01
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட சிவன் கோயில்களில் நடந்த ஆருத்ரா தரிசனத்தில் .திரளான பக்தர்கள் ஓம் நமசிவாய கோஷத்துடன் பங்கேற்றனர்.
விருதுநகரில் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் அதிகாலை 4:00 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடந்தது. நடராஜர் – சிவகாமி அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு ருத்ராட்சை மாலை அலங்காரங்கள் அணிவிக்கப்பட்டு ஆருத்ரா தரிசனத்தில் அருள்பாலித்தார். இதே போல் வாலசுப்பிரமணியசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் அதிகாலை 4:30 மணிக்கு நடராஜர் ஆருத்ரா தரிசனத்தில் காட்சி தந்தார். பக்தர்கள் வரிசையில் நின்று வழிபட்டனர்.
அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் அதிகாலை 3:00 மணிக்கு திரு பள்ளியெழுச்சி நடந்தது. கோமாதா பூஜைகள் நடந்தது. நடராஜருக்குவாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் நடராஜருக்கு 21 வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் மாணிக்கவாசகர் கோயிலில் வலம் வந்து நடராஜருக்கு காட்சியளித்தார். சாமிக்கு பூஜைகள் ஆராதனைகள் நடந்தது. ஏற்பாடுகளை அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் தலைமையில், டிரஸ்டி கணேசன் மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.
திருச்சுழி திருமேனி நாதர் கோயிலில் நடராஜருக்கு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு யாக பூஜை நடந்தது. சாமிக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் நேற்று அதிகாலை 3:0 மணிக்கு கோயில் நடை திறந்து, விக்கிரக நடராஜருக்கு சிறப்பு யாகம் செய்து,16 வகை அபிேஷகங்கள் நடந்தது. மேலும் 11 அடி உயர நடராஜருக்கு சந்தன காப்பு நடந்தது. பின்னர் மாணிக்கவாசகர் எதிர் கொண்டு திருவெம்பாவை பாடல் பாடும் வைபவம் நடந்தது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு களி பிரசாதம் வழங்கப்பட்டது.
வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயிலில் அதிகாலை 3:30 மணிக்கு ருத்ர ஜெபம் செய்து சுவாமி அம்பாள் தெய்வங்களுக்கு 18 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் நால்வர் சன்னதியில் உற்சவர் மாணிக்கவாசகர் எழுந்தருளி நடராஜர், சிவகாமி அம்பாள் முன்பு திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் சப்பர வீதியுலா நடந்தது.
வத்திராயிருப்பு நாடார் உறவின் சார்பில் திருவாதிரை திருவிழா சப்பரத் தேரோட்டம் நடந்தது. வீதியுலா எழுந்தருளிய நடராஜரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
-ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயிலில் 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்பட்ட நிகழ்ச்சியில் முதல் நாள் நடராஜர் அம்பிகை மாணிக்கவாசகர் காரைக்கால் அம்மையார் காப்பு கட்டப்பட்டது. தினமும் மாலை 13 வகை அபிஷேகங்கள் நடந்தன. 10 ம் நாளான நேற்று அதிகாலை 3:00 மணி முதல் அபிஷேகம், அலங்காரங்களுடன் ஆருத்ரா தரிசனம் நடந்தது. சுவாமி கோயில் பிரகாரங்களை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். களி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
தெற்கு வெங்காநல்லுார் சிதம்பரேஸ்வரர் கோயில், ராஜபாளையம் சொக்கர் கோயில், புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் நகர்வலம் என பல்வேறு இடங்களில் வழிபாடு நடந்தது.
திருவாதிரை விழா சிவகாசி முருகன் கோயில், சிவன் கோயில், கடை கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருவாதிரை திருவிழா நடந்தது. விழாவில் நடராஜப்பெருமாள், சிவகாமி அம்மன், பத்ரகாளியம்மன் மாரியம்மன், காமாட்சியம்மன் சிறப்பு அலங்காரத்தில் செவ்வந்தி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேரில் எழுந்தருளி நகரின் ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து தெற்கு ரத வீதியில் பக்தர்களுக்கு ஆசி வழங்குவதற்காக கோயில்களின் தேர்கள் நிறுத்தப்பட்டது. சிவகாசி, சுற்றுப் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.