ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் நடராஜர் சுவாமி ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று ஆருத்ரா தரிசனம் விழாவையொட்டி ராமேஸ்வரம் கோயிலில் டிச., 25ல் மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டப்பட்டு விழா துவங்கியது.
நேற்று கோயில் 3ம் பிரகாரத்தில் அமைந்துள்ள நடராஜர் சன்னதி முன்பு மாணிக்கவாசகர் எழுந்தருளினார்.
பின் மாணிக்கவாசகரின் திருவாசகம் பாடலை கோயில் ஓதுவார் பாடினார்.
இதையடுத்து நடராஜர் சன்னதி முன்பு இருந்த 7 திரைகள் விலகியதும் ஆருத்ரா தரிசனத்தில் நடராஜர் எழுந்தருளினார். தொடர்ந்து நடராஜருக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின் காலை 10:30 மணிக்கு நடராஜர், சிவகாமி அம்மன், பஞ்சமூர்த்திகளுடன் பல்லக்கில் ரத வீதியில் உலா வந்தனர்.