தில்லையுள் கூத்தனுக்கு திகட்டாத அபிஷேகம்! ஆருத்ரா தரிசனம்; பக்தர்கள் பரவசம்
பதிவு செய்த நாள்
04
ஜன 2026 12:01
அவிநாசி: அவிநாசி பெரிய கோவிலில், ஆடல் வல்லானுக்கு, 32 திரவியங்களில் மஹா அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் ஆனந்தமாக நடைபெற்றது. கொட்டும் பனியை பொருட்படுத்தாமல், அதிகாலையிலேயே திரண்ட பக்தர்கள், ‘ஓம் நமசிவாய’ கோஷமிட்டு, தில்லையுள் கூத்தனை வழிபட்டனர். மார்கழி மாத திருவா திரை நட்சத்திர நாளில், ஆருத்ரா தரிசன விழா கொண்டாடப்படுகிறது. மாணிக்கவாசகர் திருப்பாவை உற்சவம், 10 நாட்கள் நடந்து முடிந்ததும்; மார்கழி மாத பவுர்ணமி நாளில், சிவாலயங்களில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று, ஆருத்ரா தரிசன காட்சியும், ஸ்ரீநடராஜர், சிவகாமியம்மன் திருவீதியுலா நிகழ்ச்சியும் கோலாகலமாக நடந்தது. அவ்வகையில், கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதும், காசியில் வாசி அவிநாசி என்று காசிக்கு நிகராக போற்றப்படுவதுமான, அவிநாசியில் உள்ளஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், ஆருத்ரா தரிசன பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது. நேற்று அதிகாலை, 3:00 மணி முதலே கோவிலுக்கு பக்தர்கள் திரண்டனர். 4:00 மணிக்கு விபூதி அபிஷேகத்துடன் மஹா அபிஷேகம் துவங்கி, பால், தயிர், சந்தனம், பழச்சாறுகள் என மொத்தம், 36 திரவியங்களில் ஆடல்வல்லானுக்கும், சிவகாமி அம்மைக்கும் மஹா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மையப்பர், பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அவிநாசி கோவில் சிவாச்சார்யார்கள் வேத விற்பன்னர்கள் நான்கு வேதங்களை பாராயணம் செய்ய, கரூர் குமாரசாமிநாத தேசிகர், சிவசங்கர் ஆகியோர் சிவபுராணம் உட்பட பஞ்ச புராணங்களை பண்ணிசையுடன் இசைக்க, பஞ்ச வாத்தியங்கள் முழங்க, பக்தர்களின் ஓம் நமசிவாய கோஷம் விண்ணைப் பிளக்க, சிவகாமி அம்மன் உடனமர் நடராஜ பெருமானுக்கு, மஹா அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அரச மரத்தை சுற்றி, பட்டி சுற்றுதல் நான்கு ரத திருவீதி உலா ஆகியன நடைபெற்றது. முன்னதாக, அவிநாசிலிங்கேஸ்வரர் தேர்த்திருவிழா அன்னதான கமிட்டி சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்டத்தில்... திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து சிவாலயங்களிலும், நேற்று ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடந்தது. திருப்பூர் மற்றும் நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில்களில், அதிகாலை, 4:00 மணிக்கு, ஸ்ரீநடராஜர், சிவகாமியம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார்கள், 18 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்துடன், பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசன காட்சியளிருனர். காலை, 9:00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீநடராஜப்பெருமான் மற்றும் சிவகாமசுந்தரி அம்மன், பட்டி விநாயகரை, 11 முறை வலமாக சுற்றிவந்தனர். தொடர்ந்து, தேர்வீதிகளில் திருவீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், சாமளாபுரம் ஸ்ரீசோழீஸ்வரர் கோவில், பழங்கரை பொன்சோளீஸ்வரர் கோவில், வாழைத்தோட்டத்து அய்யன் கோவில், அபிஷேகபுரம் ஐராவதீஸ்வரர், குட்டகம் மொக்கணீஸ்வரர் கோவில், சேவூர் வாலீஸ்வரர் கோவில், எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், திருப்பூர் பூச்சக்காடு செல்வ விநாயகர் கோவில், ராயபுரம் ராஜவிநாயகர் கோவில், லட்சுமி நகர் அருணாச்சல ஈஸ்வரர் கோவில், டி.பி.ஏ. காலனி காசி விஸ்வநாதர் கோவில் உட்பட, அனைத்து சிவாலயங்களிலும், ஆருத்ரா தரிசன காட்சியும், சுவாமி திருவீதியுலாவும் நடந்தது. திருமாங்கல்ய நோன்பு கடைபிடித்த பக்தர்கள், தம்பதி சமேதராக வந்து, சிவாலயங்களில் தரிசனம் செய்தனர். மஞ்சள்சரடு, சாந்து, கண்ணாடி வளையல், பூ, மஞ்சள் மற்றும் குங்குமம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன.
|