வடாரண்யேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா அபிஷேகம் விமரிசை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
பதிவு செய்த நாள்
04
ஜன 2026 12:01
திருவாலங்காடு: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் இரவு ஆருத்ரா அபிஷேகமும், நேற்று அதிகாலை கோபுர தரிசனமும் நடந்தது. இதில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவில், சிவபெருமான் நடனமாடிய ஐந்து சபைகளில் முதற்சபையான ரத்தினசபை. ஆண்டுதோறும், ஆருத்ரா அபிஷேகம் மற்றும் கோபுர தரிசனம் விமரிசையாக நடைபெறும். அந்த வகையில், ஆருத்ரா அபிஷேகம், நேற்று முன்தினம் இரவு 9:00 மணி முதல் மறுநாள் அதிகாலை 3:00 மணி வரை, நடராஜ பெருமானுக்கு, 34 வகையான பழங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, நடராஜ பெருமான் சிறப்பு அலங்காரத்தில் தோன்றினார். பின், கோபுர தரிசனம் நடந்தது. இதில், தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். திருவள்ளூர் திருவள்ளூர் பூங்கா நகர், சிவ விஷ்ணு கோவிலில், ஆருத்ரா முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை நடராஜருக்கு அபிஷேகம் நடந்தது. நேற்று காலை, கோவில் வளாகத்தில் இருந்து நடராஜர், பார்வதி தாயாருடன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதியுலா நடந்தது. அதேபோல், பஜார் வீதி திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில், அபிஷேகம், ஆராதனை நடந்தது.காலை 8:30 மணியளவில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. திருத்தணி திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் ஆருத்ரா விழாவில், பாலமுருகருக்கு வெந்நீர் அபிஷேகம் நடைபெறுகிறது. நேற்று மூலவர் முருகப்பெருமான் பின்புறம் உள்ள பாலசுப்பிரமணியர் சன்னிதியில், விபூதி, பால், பன்னீர், இளநீர், உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு, வெந்நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதேபோல், முருகன் கோவிலின் உபகோவிலான சுந்தர விநாயகர் கோவிலில், சுந்தரேசர் சன்னிதியில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு உற்சவர்கள் சிவகாமி மற்றும் சுந்தரேசர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தனர். ஊத்துக்கோட்டை ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி கிராமத்தில் சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்ட மயக்கத்தில், அன்னை பார்வதி தேவி மடியில் தலை வைத்து உருவ ரூபத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். நேற்று முன்தினம் இரவு உற்சவர் நடராஜருக்கு சிறப்பு பூஜை நடந்தது. நேற்று உற்சவர் நடராஜர், சிவகாமி தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் சுருட்டப்பள்ளி, ஊத்துக்கோட்டைபகுதிகளில் வீதியுலா வந்தனர். அடிப்படை வசதியில் குறைபாடு திருவாலங்காடில் பக்தர்கள் புலம்பல் கழிப்பறை, குடிநீர், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை திருவாலங்காடு கோவில் நிர்வாகம் சரிவர செய்யாததால், தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் அவதியடைந்தனர். நேற்று முன்தினம் இரவு ஆருத்ரா தரிசனம் காண, 100 மற்றும் 300 ரூபாய் டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டது. 100 ரூபாய் டிக்கெட், 8:50 மணிக்குள் தீர்ந்து விட்டதாக அறிவித்து, பின் 300 ரூபாய் டிக்கெட் மட்டுமே வினியோகிக்கப்பட்டது. ஆனால், 100 ரூபாய் தரிசனத்தில் பெரும்பாலான இடங்கள் காலியாக இருந்தன. இதனால், பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். அதேபோல, காலை 10:00 மணியளவில், பக்தர்கள் அதிகளவில் வந்த போது, பெரும்பாலான போலீசார் மற்றும் கோவில் பணியாளர்கள் ஓய்வெடுக்க சென்றனர். காலை 11:00 மணியளவில் கூட்டம் அலைமோதியதால், தரிசனத்திற்கு வந்தவர்கள் நான்கு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். பாதுகாப்பு குறைபாடால் பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
|