பதிவு செய்த நாள்
04
ஜன
2026
12:01
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சிவன்கோயில்களில் நடந்த ஆருத்ரா தரிசன வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகர் திருக்கோயிலில் உள்ள கைலாசநாதர் சன்னதியில் ஆருத்ரா தரிசன வழிபாடுகள் நடந்தது. இதையொட்டி சிவகாமி அம்பாள் சமேத நடராஜப் பெருமானுக்கு 21 திருவெம்பாவை பாடல்களால் பாராயணம் செய்து சிறப்பு தீபாராதணை நடந்தது. சிவாச்சாரியார் கைலாசம் தலைமையில் நடைபெற்ற சிறப்பு வழிப்பாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பூஜைகளுக்கு பின் பக்தர்களுக்கு திருவாதிரை களி பிரசாதமாக வழங்கப்பட்டது.இது போல் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் நடராஜப் பெருமான் சன்னதியில் ஆருத்ரா தரிசன வழிபாடுகள் நடந்தன.
வடமதுரை : மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. நடராஜருக்கு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், களி, பால், சந்தனம் என பலவித பொருட்களால் அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சின்னாளபட்டி : சதுர்முக முருகன் கோயிலில் அண்ணாமலையார், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி, சதுர்முக முருகனுக்கு திரவிய அபிஷேகம்,மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது.
பித்தளைப்பட்டி அபிதகுஜாம்பிகை அம்மன் சமேத அண்ணாமலையார் கோயில் ,சித்தையன்கோட்டை காசி விசுவநாதர் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் திருவாதிரை சிறப்பு பூஜைகள் நடந்தது.
-- நத்தம் : கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் ,ஆருத்ரா பூஜை நடந்தது. யாகசாலை அமைக்க வேத மந்திரங்கள் முழங்க கலச பூஜை நடந்தது.
பின்னர் 21 வகை அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், மூலவர் கைலாசநாதர், செண்பகவல்லி தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நடராஜர் சமேத சிவகாமி அம்மன் தேரில் எழுந்தருள முக்கிய வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தார். குட்டூர் அண்ணாமலையார் கோயிலிலலும் ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதையொட்டி கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள்நடந்தது.
பழநி : பெரியநாயகி அம்மன் கோயிலில் நடராஜர், சிவகாமி அம்மனுக்கு சிறப்பு யாகம் , விநாயகர், அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தருக்கு 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றன.
சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். நடராஜர், சிவகாமி அம்மனுக்கு திருஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அ.கலையம்புத்துார், அக்ரஹாரம் கல்யாணியம்மன்,கைலாசநாதர் கோயிலில் நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ருத்ர ஜெபம், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.